டெல்லி ஜந்தர் மந்தரில் வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பலகோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தமிழக விவசாயிகள் நேற்று மனித மலத்தை தின்று போராட்டம் நடத்தினார்கள்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 2-வது கட்டமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஜூலை 16-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 57-வது நாளாக நீடித்தது. ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். 

எலிக்கிறி சாப்பிட்டும், பாம்புக்கறி சாப்பிட்டும், சிறுநீர் குடித்தும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி இதுவரை தமிழக விவசாயிகளை அழைத்துப் பேசவில்லை.

இந்நிலையில், உச்சகட்டமாக நேற்று மனித மலத்தை தின்று தமிழக  விவசாயிகள் போராட்டம் நடத்தியது வேதனையளிப்பதாக இருந்தது.

இது குறித்து போராட்டக்குழுத் தலைவர் அய்யாகண்ணு கூறுகையில், “ மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த 56 நாட்களாக போராட்டம் நடத்திவிட்டோம். இதில் உச்ச கட்டமாக, மனிதமலத்தை தின்று போராட்டம் நடத்தினோம். 

 பிரதமர் மோடி எங்களை இதுவரை சந்தித்து பேசவில்லை. எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு வேளை உணவு கூட தரமுடியாத சூழலில் நாங்கள் இருக்கிறோம்.அதனால், மனித மலத்தை தின்று உயிர்வாழ்கிறோம் என்ற ரீதியில் இந்த போராட்டத்தை நடத்தினோம்.

இதற்காக காலையில் நாங்கள் மலத்தை சேகரித்துவைத்து, போராட்டத்தில் அதை தின்று எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். வறட்சி நிவாரண நிதி அளிக்காமல், இழப்பீடு தராமல், கடன் தள்ளுபடி செய்யாமல், மத்தியஅரசு தமிழக விவசாயிகளை மலத்தை தின்னவைத்து விட்டது . நாளை( இன்று ) தமிழக விவசாயிகள் மனிதக் கறியை தின்று போராட்டம் நடத்த இருக்கிறோம்.

இதற்கு முன் 41 நாட்கள் போராட்டம் நடத்தினோம். இப்போது 2-வது கட்டமாக  செவ்வாய்கிழமையோடு 59-வது நாள் ஆகிறது. ஒட்டுமொத்தமாக எங்களின் 100-வது நாள் போராட்டத்தின் போது, அனைத்து விவசாயிகளும் நிர்வாணமாக, பிரதமர் மோடியின் அலுவலகத்தை நோக்கி நடைமபயணம் செல்ல இருக்கிறோம்” என்று தெரிவித்தார்