புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பணியாற்றியபோது, ராஜ்நிவாஸ் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையை வரவழைத்த காரணத்தால் ரூ.1.28 கோடி அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் ஏற்பட்ட மோதலின் உச்சமாக ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸை முற்றுகையிட போவதாக அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக அறிவித்தார். இதனால் ஆளுநர் கிரண்பேடி தனது பாதுகாப்பை தீவிரப்படுத்தினார். அதன் கடந்த 4.1.2021 முதல் 18.2.2021 வரையிலான 44 நாட்களுக்கு ஆளுநர் மாளிகை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதன்படி சாலைகளில் தடுப்புகள் அமைத்ததோடு, ஆர்ஏஎப், சிஐஎஸ்எப் ஆகிய பிரிவுகளின் காவலர்கள் கொண்டுவரப்பட்டனர்.
மேலும் படிக்க: வன்முறையாக மாறிய போராட்டம்... வன்முறையைக் கட்டுப்படுத்த உ.பி. அரசு அதிரடி!!
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பணியாற்றியபோது, ராஜ்நிவாஸ் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையை வரவழைத்த காரணத்தால் ரூ.1.28 கோடி அரசின் நிதி செலவாகியுள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது. இதுபற்றி பேசிய ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறும் போது,” மத்திய சிஐஎஸ்எப் ஒரு கம்பெனி காவலர்களுக்கு ரூ.28.42 லட்சமும், இவர்களின் போக்குவரத்திற்கு பிஆர்டிசி பேருந்துக்கு வாடகை ரூ.39.95 லட்சமும், கடற்கரை சாலையில் தடுப்புகள் அமைத்ததற்கு ரூ.2.87 லட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆர்ஏஎப் 2 கம்பெனி காவலர்களுக்கு செலவு செய்த ரசீது இதுவரை அனுப்பவில்லை என்று கூறும் அவர், இந்த இரண்டு கம்பெனிக்கும் சுமார் ரூ.56.84 லட்சம் செலுத்த வேண்டியிருக்கிறது என்றார். இதன் மூலம் பாதுகாப்பு பணிக்கு மட்டுமே ரூ.1.28 கோடி செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. புதுச்சேரியிலேயே பாதுகாப்பு பணிக்கு உருவாக்கப்பட்ட ஐஆர்பிஎன் மற்றும் ஆயுதப்படை காவலர்களை பயன்படுத்தாமல், மத்திய பாதுகாப்பு படையினரை அழைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியெழுப்பிய அவர், மத்திய பாதுகாப்பு படையினரை அழைத்து அரசின் நிதி ரூ.1.28 கோடியை வீணடித்துள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க: கேரளா தங்க கடத்தல் வழக்கு; என்னை கொன்று விடுங்கள்..- ஸ்வப்னா சுரேஷ் கண்ணீர் பேட்டி !!
