கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி ஆறுதல் தெரிவித்துள்ளார். கேரளாவில் 87 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 14 மாவட்டங்களும் வெள்ள நீரால் சூழ்ந்தது. 

இதனால் பொதுமக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரளாவிற்கு பல்வேறு தரப்பிலும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி ட்விட்டரில் ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். உங்களின் வேதனையை பகிர்ந்து கொள்கிறேன். மேலும் கேரள மக்களுக்கு எப்போதும் துணை நிற்போம் என்றார். விரைவில் அவர்கள் மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.