முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 50 வாக்குகள் கூட வாங்கவில்லை: கமல்நாத் கேள்வி?
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அவர்களது கிராமங்களில் 50 வாக்குகள் கூட வாங்கவில்லை என மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், தெலங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பால் வேதனையடைந்தேன்: ராகுல் காந்தி!
அந்த வகையில், மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் 163 தொகுதிகளில் பாஜகவும், 66 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் அம்மாநிலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கமான போட்டி இருக்கும் என கணித்த நிலையில், காங்கிரஸ் பெரும் பின்னடவை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் முதல்வரான கமல்நாத்தை ராஜினாமா செய்யச் சொல்லி கட்சி மேலிடம் அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அவர்களது தொகுதிகளில் உள்ள கிராமங்களில் 50 வாக்குகள் கூட வாங்கவில்லை என கமல்நாத் தெரிவித்துள்ளார். இது தனக்கு ஆச்சரியமளிப்பதாக தெரிவித்த அவரிடம், தேர்தல் முறைகேடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உடனடியாக அதுகுறித்த முடிவுக்கு வரமுடியாது; முதலில் நான் அனைவரிடமும் இதுபற்றி பேச வேண்டும் என்றார்.
வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி பேசிய அவர், எந்தவொரு சிப் பொருத்தப்பட்ட இயந்திரத்தையும் ஹேக் செய்ய முடியும் என்றார். “மக்களின் மனநிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் மக்களிடம் தான் கேட்க வேண்டும். தங்கள் கிராமத்தில், 50 ஓட்டுகள் கிடைக்கவில்லை என, சில எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர். அது எப்படி சாத்தியம்?” என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, பொதுமக்கள் ஆணையை ஏற்றுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சி என்ற பொறுப்பை காங்கிரஸ் நிறைவேற்றும் என்றும் கமல்நாத் கூறியிருந்தார்.