மிக்ஜாம் புயல் பாதிப்பால் வேதனையடைந்தேன்: ராகுல் காந்தி!
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், தீவிரப்புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திராவின் நெல்லூர் - மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கவுள்ளது. முன்னதாக, மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே நிலை கொண்டிருந்ததால் கனமழை பெய்தது. இதனால், 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தலைநகர் சென்னையில் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக, பேருந்து, ரயில், விமான சேவை பாதிக்கப்பட்டது.
பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் சரிந்து விழுந்தன. நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. செல்போன் சிக்னல்கள் கிடைக்கவில்லை. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படுகின்றன.
மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் களத்தில் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் நேரடியாக நிலைமையை கண்காணித்து வருகிறார். கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இருப்பினும், மிக்ஜாம் புயல் கனமழையால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டை ஒப்பிடும் போது மழையின் அளவு அதிகம் என்றாலும், பாதிப்புகள் குறைவு. ஆனாலும்கூட, இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி!
இந்த நிலையில், தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழகத்தில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அன்புக்குரியவர்களை இழந்து வாடும் மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சூறாவளி முன்னேறும்போது, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசாவின் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் அரசாங்கத்தின் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை கனமழை பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்பி மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.