இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு புதிய பதவி!
இந்தூர் ஐஐடி ஆளுநர் குழுவின் தலைவராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்
பிரபல விண்வெளி விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான டாக்டர் கே சிவன், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் ஐஐடி ஆளுநர் குழுவின் தலைவராக மூன்றாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். “இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர். கே. சிவன், ஐஐடி இந்தூரின் கவர்னர்கள் குழுவின் தலைவராக இருப்பதில் பெருமை அடைகிறோம்.” என இந்தோர் ஐஐடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்3 வெற்றிகரமாக தரையிறங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முந்தைய நாள் இந்தூர் ஐஐடி ஆளுநர் குழுவின் தலைவராக சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தூர் ஐஐடி ஆளுநர் குழுவின் தலைவராக 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் இருந்த பேராசிரியர் தீபக் பி பாதக்கின் பதவிக்காலம் ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அப்பதவிக்கு சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்றாண்டுகளுக்கு அவர் அப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டாக்டர் சிவன் ஐஐடி இந்தூர் ஆளுநர் குழுவின் தலைவராக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறோம். அதே சமயம், இந்த நிறுவனத்திற்கு வழிகாட்டியாக இருந்து எங்களை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற பதவிக்காலம் முடிவடைந்த பாதக்கிற்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம். அவரது மகத்தான அனுபவத்தால் எங்களை அவர் சிறப்பாக வழிநடத்தி பல விஷயங்களுக்கு தீர்வை ஏற்படுத்தினார்.” என ஐஐடி இந்தூர் இயக்குனர் சுஹாஸ் ஜோஷி கூறியுள்ளார்.
“சிவனின் வழிகாட்டுதலின் பேரில், இந்த நிறுவனம் புதிய உயரங்களை எட்டும்; விண்வெளிப் பொறியியல் துறையில் ஆய்வு செய்யப்படாத விஷயங்களில் பணிபுரிந்து நாட்டின் விண்வெளிப் பணிக்கு பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.” எனவும் சுஹாஸ் ஜோஷி தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன? சாதக, பாதகங்கள் என்ன?
சிவனின் வழிகாட்டுதலின் கீழ்தான் சந்திரயான்2 திட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாகத்தான் சந்திரயான்-3 தனது நிலவு பயணத்தை மேற்கொண்டு வெற்றி அடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிவன், தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை பயின்றவர். மதுரை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி (கணிதம்) முடித்த பிறகு, சென்னையில் உள்ள எம்.ஐ.டி-யில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்தார். தொடர்ந்து, பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் அறிவியல் நிறுவனத்தில் முதுகலை அறிவியல் படித்தார்.
2006 ஆம் ஆண்டில் மும்பை இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்த அவர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக 2015 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. இஸ்ரோ தலைவராக 2018ஆம் ஆண்டு பதவியேற்ற அவர், 2022ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.