ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன? சாதக, பாதகங்கள் என்ன?
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான விஷயம் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தொடரின், சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை பாஜக அரசு தாக்கல் செய்யப் போவதாக செய்திகள் பரவி வருகின்றன. இதனிடையே, ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு ஒன்றையும் மத்திய அரசு அமைத்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன?
இந்தியாவில், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையும் போது அல்லது சில காரணங்களால் அது கலைக்கப்படும் போது, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல்கள் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுகின்றன. ஆனால், நாடு முழுவதும் பாராளுமன்றம் சட்டமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றழைக்கப்படுகிறது.
இந்தியாவில் 1952 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல்கள் நடத்த ஆரம்பித்ததிலிருந்து 1971 ஆம் ஆண்டுவரை பாராளுமன்ற / சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில்தான் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், காங்கிரஸில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்திரா காந்தி ஆட்சிகாலத்தில் ஓராண்டுக்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது, ஆட்சி கவிழ்ப்புகள் உள்ளிட்டவைகளால் வேறு வேறு காலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டன. நாடாளுமன்றத்துக்கு வேறு காலத்தில் பொதுத்தேர்தல் நடக்கிறது.
சாதகம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலமாக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒரு அங்கமாகவும் இது இருந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் தற்போதைய எண்ணம் கிடையாது. 1999-2004 ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்போது துணைப் பிரதமராக இருந்த எல்.கே.அத்வானி இந்த யோசனையை முன்வைத்தார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆதரவாளர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டுவது, ஒரே தேர்தல் நடந்தால் ஒட்டுமொத்த தேர்தல் செலவை அது குறைக்கும்; தேர்தல் ஆணையத்தின் சுமை குறையும் என்பது. நாடு முழுவதும் எதோ ஒரு பகுதியில் எப்போதும் தேர்தல் நடந்து கொண்டிருப்பது, தேர்தல் ஆணையத்துக்கு, வேட்பாளர்களுக்கும் செலவை அதிகரிக்கும் என்கிறார்கள்.
மக்களிடம் பணம் பறிப்பது தான் மோடி அரசின் நோக்கம்: ராகுல் விளாசல்!
ஒரு நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவான மற்றொரு வாதம், அது மிகவும் திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் என்பது. தேர்தல்களின் போது, முழு அரசு இயந்திரமும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் செயல்முறையை நடத்துவதில் கவனம் செலுத்துகிறது, இது அன்றாட நிர்வாகத்தை பாதிக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால், வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், வாக்காளர்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க வசதியாக இருக்கும் என்ற ஆதரவு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பாதகங்கள் என்ன?
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை அதனை ஆராய அமைக்கப்பட்டிருக்கும் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக இருந்தபோது ஆதரித்து பேசியிருக்கிறார். ஆனால், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அதனை ஆதரிக்கவில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் என்ற யோசனையை சட்ட ஆணையம் ஆதரித்திருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒரேவேளை நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, மத்திய அரசு தோற்றுப்போனால் பாராளுமன்றம் கலைக்கப்படும் போது, மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்படுமா என்ற கேள்விகளை இதனை எதிர்ப்போர் முன்வைக்கின்றனர். அடிக்கடி தேர்தல் வருவது ஆரோக்கியமானது என்றே அவர்கள் கூறுகின்றனர்.
1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 16 சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடந்துள்ளது. அதில் வாக்களித்த 77 சதவீதம் பேர் நாடாளுமன்றம் சட்டமன்றம் இரண்டுக்கும் ஒரே கட்சிக்கே வாக்களித்துள்ளது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2014இல் அந்த எண்ணிக்கை 86 சதவீதமாக உயர்ந்துவிட்டது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், அதிகாரத்துவத்துக்கு வழிவகுப்பது மட்டுமின்றி மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டி, கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்த்து விடும் என குற்றம் சாட்டப்படுகிறது.
நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது தேசிய அளவிலான பிரச்சனைகளே முதன்மை பெறும். அதில் தேசிய கட்சிகளே மேலாதிக்கம் செலுத்தும் நிலையும் ஏற்பட்டு விடும் எனவும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்ப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.