சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், விமான நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கோட்டயம் மாவட்டம், காஞ்சரப்பள்ளியில் உள்ள செருவேலி எஸ்டேட்டில் 2 ஆயித்து 263 ஏக்கரில் இந்த விமானநிலையம் அமைக்கப்படுகிறது. இங்கிருந்து ஐய்யப்பன் கோவிலுக்கு மிகவிரைவாக சென்றுவிடலாம் என்பதற்காக சபரிமலைக்கு அருகே உருவாகிறது.

பத்திணம்திட்டா மாவட்டம், சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து, சாமிதரிசனம் செய்வார்கள். நாடுமுழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். இது ஆண்டுதோறும் அதிகரித்தும் வருகிறது. மேலும், இந்த கோவிலுக்கு சாலை மார்க்கமாக மட்டுமே பக்தர்கள் வரக்கூடிய நிலை இருப்பதால், நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இதை தவிர்க்கும் பொருட்டு, கடந்த 2016ம் ஆண்டு ஆண்டு சபரிமலையில் கிரீன் பீல்ட் விமானநிலையம் அமைக்க  அரசு முடிவு செய்தது. முன்னதாக முந்தைய காங்கிரஸ் அரசு ஆரன் முலாவில் விமானநிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், சுற்றுச்சூழல்துறை கடுமையாக எதிர்த்த காரணத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு பொறுப்பு ஏற்றவுடன் இதற்கு தீர்வு காணும் வகையில், கூடுதல் தலைமைச் செயலாளர் பி.எச்.குரியன் தலைமையில் குழு அமைத்தது. அந்த குழுவினர் விமானநிலையம் அமைக்க தகுதியான, தகுந்த இடத்தை தேர்வு செய்து அரசிடம் அறிக்கை அளித்துள்ளனர்.

அதன்படி, கோட்டயம் மாவட்டம், காஞ்சரப்பள்ளியில் உள்ள செருவேலிஎஸ்டேட்டில் 2 ஆயித்து 263 ஏக்கரில் அமைக்கலாம் என அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கைக்கு மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துவிட்டது.