விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துகுள்ளானதை அடுத்து, அங்கு வந்த இளைஞர்கள் செல்பி எடுக்க ஓடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வழக்கமான சோதனைக்காக புறப்பட்டு சென்றது. அப்போது விவசாய நிலம் ஒன்றில் மோதி விபத்துக்குள் சிக்கியது. விமானத்தில் இருந்த மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

விமானம் விபத்துக்குள்ளானது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடையே சென்ற நிலையில், சம்பவ இடத்தில் கூடினார். அப்போது அவர்கள், தாங்கள் வைத்திருந்த செல்போன்மூலம், செல்பி எடுத்துக் கொள்வதும், விபத்துக்குள்ளான விமானத்தை படம் பிடிப்பதுமாக இருந்தனர். விபத்தில் சிக்கியுள்ள விமானம் என்ன நிலையில் உள்ளது... அது வெடித்து சிதறும் அபாயம் உள்ளதா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் விமானத்தின் அருகே இருந்து கொண்டு பல்வேறு நிலைகளில் புகைப்படங்கள் எடுத்து தள்ளினர். 

விபத்துக்குள்ளான விமானம் வெடிக்கும் நிலையில் உள்ளதா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ளாமல் அவர்கள் செல்பி எடுத்துக்  கொண்டனர். விபத்தில் சிக்கியவர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ளும் மோசமான போக்கு இளைஞர்களிடையே நிலவி வருகிறது. செல்பி மோகத்தால் எவ்வளவோ உயிர்களை இழந்த பிறகும், அதன் மீதான நாட்டம் இன்னும் குறைந்தபாடில்லை.