டொகோ நாட்டு ஜெயிலில் மாட்டிக்கொண்ட இந்தியர்கள் விடுதலை…: இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாராட்டு!
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான Togo சிறையில் சுமார் 4 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்த கேரளாவை சேர்ந்த 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் பாராட்டியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த ஆண்டனி, நவீன், தருண், நிதின், ஷாஜி ஆகிய 5 ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர், Merchant Navy Firm என்ற நிறுவனம் மூலம் கடந்த 2013-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு வியாபார நோக்கத்திற்காக பயணம் மேற்கொண்டனர்.
நைஜீரியா அருகே சென்றபோது கப்பலில் கோளாறு ஏற்பட்டதால், அவர்கள் நடுக்கடலில் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற ஆப்பிரிக்க கடற்படை அதிகாரிகள், கப்பலில் இருந்தவர்கள் கடற்கொள்ளையர்கள் என தவறாகக் கருதி அனைவரையும் சிறைபிடித்து டோகோ நாட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட 5 பேரையும் மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இந்திய-ஆப்பிரிக்க உச்சிமாநாட்டின்போது இதுதொடர்பாக டோகோ நாட்டு தலைவரிடம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதன்பலனாக, தற்போது 5 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி டோகோ நாட்டு அரசு விடுவித்துள்ளது. அவர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டோகோ சிறையில் இருந்து கேரளாவை சேர்ந்த 5 பேர் மீட்கப்பட்டுள்ளது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், இந்தியர்கள் 5 பேரை மீட்கும் நடவடிக்கையில் தூதரக அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
