உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 923 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 23 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா வைரஸ் நாடுமுழுவதும் பரவுவதை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போது 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவிற்கு முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் இருந்து தெலுங்கானா திரும்பிய 74 வயது முதியவர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று மரணமடைந்தார். இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் தெலுங்கானாவில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல கேரளாவிலும் நேற்று கொரோனாவிற்கு முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கொச்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 66 வயது முதியவர் நேற்று பலியானார்.

 

இதுவரையில் கேரளாவில் 165 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 185 புதிய கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 923 ஆக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது.