உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவவர்களின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்து பலி எண்ணிக்கை 19 ஆக இருக்கிறது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுகளை எச்சரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மஹாராஷ்டிரா, கேரளா ஆகியவை விளங்குகின்றன. மகாராஷ்டிராவில் இதுவரை 4 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர். இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துபாயில் இருந்து சில வாரங்களுக்கு முன் இந்தியா திரும்பிய முதியவர் உடல் நிலை பாதிக்கப்பட்டார்.

கொச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த 69 வயதான முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து தனிமை சிகிச்சையில் இருந்த அவர் தற்போது மரணமடைந்துள்ளார். இதையடுத்து கேரளாவில் முதல் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் கேரளாவில் 165 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 8 பேர் வெளிநாட்டினர் என கேரள அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.