பெங்களூரு விமான கண்காட்சி நடைபெறும் இடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின. 

பெங்களூரு புறநகர் பகுதியான ஹெலங்கா விமானப்படை தளத்தில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது  AeroIndia2019 என்ற பெயரில் கடந்த 21ம் தேதி தொடங்கிய கண்காட்சி வருகிற 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 232 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 63 விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகளையும், அங்குள்ள நவீனரக விமானங்களை பார்வையிடுவதற்காகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு செல்கின்றனர். 

இந்நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கண்காட்சி வளாகத்தில் பார்வையாளர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது.

ஒரு காரில் திடீரென ஏற்பட்ட தீ மற்ற வாகனங்களுக்கும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த மீட்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. இதர சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.