டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள், வெளியே சிறுநீர் பாட்டில்களை வீசியதாக எழுந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் பலர், டெல்லி துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் சிறுநீர் நிரப்பிய பாட்டில்களை வெளியே வீசுவதாக புகார் எழுந்தது. நேற்று முன்தினம் மாலை, கட்டிடத்தின் பின்புறம் உள்ள குடிநீர் குழாய் அருகிலிருந்து, இத்தகைய 2 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து கரோனா வைரஸ் தொற்றை பிறருக்கு பரப்ப முயன்றதாக, தனிமைப்படுத்தும் வசதிக்கான உதவி இயக்குநர் அளித்த புகாரின் பேரில், வடக்கு துவாரகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுநீர் பாட்டில்கள் வீசப்படுவதை சிவில் பாதுகாப்பு படையினர் தங்கள் செல்போனில் பதிவு செய்துள்ளதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத் மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள், மருத்துவ ஊழியர்களை தாக்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உ.பி. அரசு, கடந்த சில தினங்களுக்கு முன்வு வழக்கு பதிவு செய்தனர்.