Rahul Gandhi: சாதிரீதியாக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு புதிய சட்டச் சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. சாதிரீதியாக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள கோட்டாலி காவல் நிலையத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி மீது பாய்ந்தது வழக்கு
ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த அமித் குமார் என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். தனது சமூகத்திற்கு எதிராக ராகுல் காந்தி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை, இந்த குற்றச்சாட்டு உண்மையானால் ராகுல் காந்திக்கு என்ன தண்டனை கிடைக்கும்? SC/ST சட்டத்தின்படி, ஒருவரை பொது இடத்தில் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவது அல்லது இழிவாகப் பேசுவது நிரூபிக்கப்பட்டால், சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
Nepal Flood : பயங்கர வெள்ளத்திலும் இந்த வீடு மட்டும் எப்படி தப்பியது?
என்ன தண்டனை?
இந்திய சட்டப்படி, பட்டியல் சாதி (SC) அல்லது பழங்குடியினரை (ST) சேர்ந்த ஒருவரை, சாதி ரீதியாக பிரச்சனை செய்வது அல்லது இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989-ன் கீழ் இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்குக் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து, இந்தத் தண்டனையை அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. மேலும், தண்டனை பெற்றவருக்கு அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 3(1)(r) மற்றும் 3(1)(s) ஆகியவை சாதி தொடர்பான வழக்குகளைக் கையாளுகின்றன. SC/ST சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்தும் அல்லது மனரீதியாக துன்புறுத்தும் நோக்கத்தில், ஒருவர் வேண்டுமென்றே இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். ஆனால், இந்தச் சம்பவம் ஒரு பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் முன்னிலையில் நடந்திருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான நிபந்தனை. இரண்டு பேர் மட்டும் தனியாக இருக்கும்போதோ, ஒரு அறைக்குள்ளோ அல்லது தனிப்பட்ட முறையில் பேசும் விஷயங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.
சாதிப் பெயரைக் குறிப்பிட்டாலே குற்றமா?
ஒருவருடைய சாதிப் பெயரை வெறுமனே குறிப்பிடுவது மட்டுமே குற்றமாகிவிடாது. இதுகுறித்து உச்ச நீதிமன்றமும், பல்வேறு உயர் நீதிமன்றங்களும் அவ்வப்போது முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒருவரை சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தும் நோக்கம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்துடன், பொது இடத்தில் சாதிப் பெயரைச் சொல்லி துன்புறுத்தியது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டனை கிடைக்கும்.
ஒரு காலத்தில், SC/ST சமூகத்தினர் பெரும் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டனர். அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது. இந்த பாகுபாடு, வன்முறை மற்றும் அவமானங்களுக்கு எதிராக, 1989-ல் கொண்டுவரப்பட்ட இந்த சிறப்புச் சட்டம், சமூக சமத்துவத்திற்கும், கண்ணியத்திற்கும் ஒரு சட்டப் பாதுகாப்பை வழங்கியது. இப்போது, ஒருவரை அவரது சாதியின் அடிப்படையில் தாழ்வாகப் பார்ப்பதையோ, திட்டுவதையோ அல்லது துன்புறுத்துவதையோ சட்டம் ஒருபோதும் அனுமதிக்காது. எந்தவொரு செல்வாக்கு மிக்க நபரும் தனது பதவியையோ அல்லது அதிகாரத்தையோ பயன்படுத்தி மற்றவர்களை இழிவுபடுத்த முடியாது என்பதை நவீன சட்ட அமைப்பு உறுதி செய்கிறது.
Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
இப்போது ராகுல் காந்தி வழக்கில் என்ன நடக்கும்?
ஹல்த்வானி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், ராகுல் காந்தியின் பேச்சு உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது தனிநபரையோ இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதா என போலீஸார் முதலில் விசாரணை நடத்துவார்கள். விசாரணை அதிகாரி, சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய ஆடியோ, வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்வார். போலீஸ் விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை (சார்ஜ்ஷீட்) தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை முன்வைக்கவும், FIR-ஐ ரத்து செய்யக் கோரவும் சட்டத்தில் வாய்ப்புகள் உள்ளன.


