இனி ஏப்ரல்-மார்ச் இல்லை…..நிதியாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையாக மாற்றம்…..

தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நிதியாண்டான ஏப்ரல் முதல் மார்ச் வரை என்பதை மாற்றி ஜனவரி முதல் டிசம்பர் வரை என்று மாற்ற மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்து மத்திய அமைச்சர்ஜெட்லி பேசுகையில், “ நாட்டின் நிதியாண்டை ஏப்ரல் 1-ந்தேதி முதல் மார்ச் 31-ந் தேதிவரை என்பதை மாற்றி ஜனவரி 1முதல் டிசம்பர் 31வரை என்று மாற்ற அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக முன்னாள் பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த குழுவின அறிக்கையும் அரசுக்கு கிடைத்துள்ளது.

அதனால், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் நவம்பர், டிசம்பர் மாதமே அரசு தாக்கல் செய்வது குறித்து இப்போது கூறமுடியாது. ஏனென்றால் வரிச்சட்டங்களில் ஏராளமான திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம்’’ எனத் தெரிவித்தார்.

பயிர்கடன் தள்ளுபடி கிடையாது

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார்கங்வார் பதில் அளித்து பேசுகையில், “ கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு சார்பில், விவசாயிகளுக்கு எந்த விதமான கடன் தள்ளுபடி திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யும் திட்டங்கள் குறித்தும் இப்போது பரிசீலனையில் இல்லை.

கடந்த ஆண்டில் மண்டல கிராம வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1.23 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ் ஜூலை 12ந்தேதி வரை 29.09 கோடி பேர் வங்கிக்கணக்குகள் தொடங்கியுள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

85 சதவீதமாக பணம்புழக்கம் அதிகரிப்பு

மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில், “ நாட்டில் சமீபகாலமாக பணப்புழக்கம் படிப்படியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 28ந்தேதி ரூ.17 லட்சத்து 540 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டு ஜூலை 23-ந் தேதி நிலவரப்படி இது 15 லட்சத்து 74 கோடியாக உயர்ந்து, 85 சதவீத அளவை எட்டியுள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.