Rahul Gandhi in Wayanad: என் தந்தையை இழந்தபோது ஏற்பட்ட அதே துக்கம்; வயநாட்டில் ராகுல் காந்தி உருக்கம்
கேரளா மாநிலத்தின் வயநாடு நிலச்சரிவால் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கடவுளின் தேசம் என்று செல்லமாக அழைக்கப்படக் கூடிய கேரளா மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழையால் வயநாடு மாவட்டம் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. அதிகமான மலைப்பகுதிகளைக் கொண்டுள்ள வயநாடு மாவட்டம், தொடர் கனமழையால் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு மாவட்டமே உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களில் தற்போது வரை 290க்கும் அதிகமானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 200க்கும் அதிகமானோரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு: பெய்லி பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது! முண்டக்கையில் மீட்புப் பணிகள் தீவிரம்!
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றவருமான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழன் கிழமை தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வயநாடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த ராகுல் காந்தி மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நிலச்சரிவு விவகாரத்தால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஒட்டுமொத்த தேசமும் வயநாடு மக்களுக்கு உருதுணையாக இருக்க வேண்டும். என் தந்தையை இழந்தபோது நான் எப்படிப்பட்ட துயரத்தை சந்தித்தேனோ, அதே துயரத்தை தான் இந்த சம்பவமும் ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு; அமித் ஷா, பினராயி விஜயன் இடையே வார்த்தை போர்
நானும், எனது சகோதரி பிரியங்கா காந்தியும், இங்கு நடைபெறும் மீட்பு பணிகளை உன்னிப்பாக கவனித்து தேவையான பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்வோம். இப்பகுதியில் மீண்டும் மீண்டும் நிலச்சரிவு மற்றும் இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இதனை தடுக்கும் வகையில் விரிவான செயல்திட்டம் உடனடியாக தேவை” என்று தெரிவித்துள்ளார்.