இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்துவதற்குப் பதிலாக ஃபாஸ்டேக் மூலம் மின்னணு முறையில் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
 
இது தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ஸ்டிக்கராகும். வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் இதை ஒட்டிக்கொள்ளலாம். இதன்மூலம் வாகன ஓட்டிகளின் வங்கிக் கணக்கிலிருந்து கட்டணத் தொகை தானாக எடுத்துக்கொள்ளப்படும். 

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கென தனிப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் இந்தப் பாதையில் செல்ல வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்த பாஸ்ட்டேக் முறை கட்டாயம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், ஏற்கனவே 15 நாள்கள் அவகாசம் நீடிக்கப்பட்டது. 

இந்நிலையில், பாஸ்ட்டேக் மின்னணு அட்டை பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம், அதாவது ஜனவரி 15-ம் தேதி வரை நீடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தேசிய நெடுஞ்சாலைத் துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.