விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ வை இந்தியாவில் தடை செய்வது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் குரல்கள் வலுப்பெறுவதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்லாமல், கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை மத்திய அரசிடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்ற புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தடை குறித்த ஆலோசனை செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

7-ம் நாள் போராட்டம்

தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் உச்ச நீதிமன்றத்தில் பீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் தீர்மானத்துடன், இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பீட்டா அமைப்பையும் தடை செய்து நாட்டில் இருந்து வௌியேற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கணக்கு தாக்கல்

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா அமைப்பு கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. .

கடந்த 11-ந்தேதி உச்சநீதிமன்றம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பான வழக்கில் ஆண்டுக்கு ரூ. 30 லட்சத்துக்கு அதிகமாக நன்கொடை பெறும் நிறுவனங்கள் கண்டிப்பாக வருமான கணக்குகளை உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், விலங்குகள் நலவாரியம் என்று சொல்லிக்கொள்ளும் பீட்டா கடந்த 3 ஆண்டுகளாக வரி, வருமானம் விவரங்களை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

பேட்டி

இந்நிலையில், பீட்டா அமைப்பை தடை செய்ய மத்தியஅரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அணில்தாவேயிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், “ பீட்டாஅமைப்பை தடை செய்யக் கோரி தமிழகத்தில் உள்ள மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் ஒன்றினைந்து குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் பல மாநிலங்களிலும் குரல் வலுத்து வருகிறது. ஆதலால், பீட்டா அமைப்பை தடை செய்வது குறித்து அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது '' எனத் தெரிவித்தார்.