11 கேள்விக்கு பதில் சொல்லிட்டு ஊருக்குள்ள வாங்க... பாஜகவுக்கு ஷாக் கொடுக்கும் விவசாயிகள்!
பாஜக விவசாயிகளுக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு எதிரானது, கூட்டாட்சி மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானது என்று பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கூறியுள்ளனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது எல்லாம் 11 கேள்விகளைக் கேட்க முடிவு செய்துள்ளனர்.
குறைந்தபட்ச விற்பனை விலைக்கான உத்தரவாதம் உள்பட பல முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் பாஜக அரசுக்கு எதிராக அழுத்தமான கேள்விகளை எழுப்புகின்றனர்.
டெல்லி செல்லும் சாலைகளை இரும்பு கம்பியால் அடைத்தது ஏன்? விவசாயிகள் போராட்டத்தின்போது தடுப்புகள் போட்டு, தோட்டக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியவர்கள் யார்? டெல்லிக்கு செல்ல அனுமதிக்கப்படாத நாங்கள் வெளிநாட்டவர்களா? என்று பல கேள்விகளை சரமாரியாக முன்வைக்கின்றனர்.
பல்பீர் சிங் ராஜேவால், பிரேம் சிங் பாங்கு, ரவ்னீத் சிங் பிரார், அங்ரேஜ் சிங் மற்றும் பல்தேவ் சிங் நிஹால்கர் ஆகிய சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாய அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் குழு சண்டிகரில் உள்ள கிசான் பவனில் கூடி அனைத்து பாஜக வேட்பாளர்களுக்கும் எதிராக எழுப்பவேண்டிய கேள்வுகள் குறித்து முடிவு செய்துள்ளனர்.
சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் மூத்த தலைவரும் அகில இந்திய கிசான் கூட்டமைப்பின் தலைவருமான பிரேம் சிங் பாங்கு மற்றும் பி.கே.யூ. தலைவர் ஹரிந்தர் சிங் லகோவால் ஆகியோர் பாஜக விவசாயிகளுக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு எதிரானது, கூட்டாட்சி மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.
"வாக்குகளைப் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. அவர்களை அமைதியாக ஜனநாயக வழியில் எதிர்க்கவும் கேள்வி கேட்கவும் வேண்டும்" என்று பிரேம் சிங் பாங்கு கூறினார். பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்கக்கூடிய வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பதினொரு கேள்விகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநில விவசாயிகளுக்கும் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள், “டெல்லியில் விவசாயிகள் நுழையத் தடை விதித்த பா.ஜ.க. கிராமத்துக்குள் நுழையத் தடை” என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி ‘டெல்லி சலோ’ போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர்.
பாட்டியாலாவைச் சேர்ந்த பிரனீத் கவுர், ஃபரித்கோட்டில் இருந்து ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடும் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் தரன்ஜித் சிங் சந்து, அண்டை மாநிலமான ஹரியானாவில் பாஜக எம்பியும் ரோஹ்தக் வேட்பாளருமான அரவிந்த் சர்மா, ஹிசார் வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா என பல பாஜக கட்சி வேட்பாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி ஓய்வுக்கு முன் இதை பண்ணிருங்க... ரூ.10 கோடி பென்ஷன் தொகை பெற இதுதான் வழி!