farmer using grls instead of ox
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவர் வறுமை காரணமாக, மாடுகளுக்கு பதிலாக, ஏரில் தனது மகள்களைக் கட்டி உழவு செய்த கொடுமை அரங்கேரியுள்ளது.
சேகோரா மாவட்டம், பசந்த்பூர் பங்கிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார் காலா. ஏழ்மை நிலையில்இருக்கும் காலா, தனக்குரிய சிறிய நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வருகிறார். இவருக்கு ராதிகா(வயது14), குந்தி(11வயது) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், உழவுக்கு மாடுகளும், கலப்பையும் இல்லாததால், தனது மகள் இருவரையும் ஏரில் பூட்டி நேற்று உழவு செய்தார். இதைப் பார்த்த சிலர் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கூறினர். அவர்கள் விசாரித்தபோது, தன்னிடம் மாடுகளை பராமரிக்கவும், உழவுக்கருவிகள் வாங்கவும் பணம் இல்லை, அதனால், மகள்களை பயன்படுத்தி உழவு செய்கிறேன் என்று விவசாயி தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தகவல் கொடுத்து விவசாயின் செயலை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து விவசாயி சர்தார் காலா நிருபர்களிடம் கூறுகையில், “ வறுமையால் எனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது. எனக்குசொந்தமாக இருக்கும் சிறிய நிலத்தில் விவசாயம் செய்ய நினைத்தால், உழுவதற்கு கையில் பணம் இல்லை, இருந்தமாடுகளையும் பராமரிக்க முடியாமல் விற்றுவிட்டேன். உழவுக்கருவிகள் வாங்கவும் முடியவில்லை.
என் பணப்பிரச்சினை காரணமாக எனதுஇரு மகள்களும் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டனர். இதனால், விவசாயம் செய்ய அவர்களை பயன்படுத்திக்கொண்டேன். மாடுகள் இல்லாததால், இருமகள்களையும் ஏரில் பூட்டி உழவு செய்தேன்” என்றார்.
இதையடுத்து, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஆஷிஸ் சர்மா, தொலைபேசியில் விவசாயி சர்தாரை தொடர்பு கொண்டு விவசாயத்துக்கு தேவையான உதவிகளை அரசுவழங்கும். சிறுவயது மகள்களை உழவுக்கு பயன்படுத்தக்கூடாது. உங்களுக்கு தேவையான நியாயமான உதவிகள் அரசின் திட்டங்களில் இருந்து வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக சிவராஜ் சவுகான் இருந்து வருகிறார். மாநிலத்தில் மான்டசோர் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் விவசாயிகள், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை உயர்த்தக்கோரியும், கடன் தள்ளுபடிகோரியும் நடத்தப்பட்ட போராட்டம் விஸ்ரூபமெடுத்தது. இதில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதில் 6 விவசாயிகள் கொல்லப்பட்டனர். மேலும், கடந்த ஒரு மாதத்தில் 38 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
