உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இதுவரையில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், அமெரிக்கா, இந்தியா என உலகில் 198 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 85,594 மக்கள் பாதிக்கப்பட்டு 1300க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். இதனிடையே அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல இந்திய சமையல் கலை நிபுணர் ஒருவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் பிளாய்ட் கார்டோஸ்(59). இந்தியா மற்றும் நியூயார்க்கில் உணவகங்கள் நடத்தி வரும் இவர் பிரபல சமையல் கலை நிபுணர் ஆவார். இந்த நிலையில் கடந்த மார்ச் 8ம் தேதி மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு கார்டோஸ் சென்ற நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர் அங்கு இருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த புதன் கிழமை அன்று அவர் மரணமடைந்தார். இதையடுத்து அவர் இந்தியா வந்திருந்தபோது தொடர்பில் இருந்த நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவரது நிறுவனத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் என ஏதாவது அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இந்திய சுகாதார துறைக்கும் அந்நிறுவனம் தகவல் அனுப்பி உள்ளது.