மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் புனீத் அகர்வால். இவர் பிரபல பிஏடிஎச் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு இந்தூரின் படல்பானி பகுதியில்  சொந்தமாக  பண்ணை வீடு உள்ளது. புனீத் அகர்வால், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் நேற்று  மாலை புத்தாண்டு கொண்டாட அங்கு சென்றார்.

புத்தாண்டு கொண்டாடும் போது புனீத் அகர்வால், அவரது மகள் மற்றும் உறவினர்கள் பண்ணை வீட்டின் கட்டிடத்தில் உள்ள ஒரு கோபுரத்தில் உள்ள  லிப்டில் ஏறி  கோபுரத்தின் மேல் தளத்திலிருந்து வெளி அழகை ரசித்தனர். பின்னர் லிப்டில் இறங்கி உள்ளனர். அப்போது லிப்ட் கோளாறால்  70 அடி உயரத்தில் இருந்து விழுந்தது. இதில் அதே இடத்தில் 6 பேர் பலியானார்கள்.

இந்த விபத்தில் பலியானவர்கள் புனீத் அகர்வால் வயது 53 அவரது மகள்  பாலக் அகர்வால் 27, மருமகன் பால்கேஷ் அகர்வால் 28 பேரன் நாவ் 2 உறவினர்கள் கவுரவ் 40 ஆர்யவீர்11 ஆகியோர் அடங்குவர். புனீத் அகர்வாலின் மனைவி நிதி அகர்வால் காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ரிமோட் மூலம் பண்ணை வீட்டில் உள்ள காவலரால் இந்த லிப்ட் இயக்கப்படுகிறது. அகர்வாலின் மகன் நிபூன் கோபுரத்திலே நின்று விட்டார். எனவே அவர் விபத்தில் இருந்து தப்பி விட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.