Asianet News TamilAsianet News Tamil

வாட்ஸ் அப்பில் புதிய ரூல்ஸ்: பரவும் போலி செய்தி - மக்களே உஷார்!

வாட்ஸ் அப்பில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக போலி செய்தி பரப்பப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Fake information spread against whatsapp that new rules will be implemented
Author
First Published Jul 2, 2023, 2:10 PM IST

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் வழங்கி வருகிறது. பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்களையும் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது வழங்கி வருகிறது.

இந்த நிலையில், வாட்ஸ் அப்பில் புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் ஒன்று பரப்பப்படுகிறது. அதில், “வாட்ஸ் அப்பின் அனைத்து அழைப்புகளும் ரெக்கார்ட் செய்யப்பட்டு சேமிக்கப்படும். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் மத்திய அரசால் கண்காணிக்கப்படும். மத்திய அமைச்சகத்துடன் உங்களது செல்போன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவீர்கள். தவறான செய்தியை யாருக்கும் அனுப்ப வேண்டாம். அரசுக்கு எதிரான எவ்வித தவறான கருத்துக்களையோ, வீடியோக்களையோ அனுப்ப வேண்டாம். அரசியல் நிலவரம், நடப்பு பிரச்சினைகள் பற்றி பிரதமர் குறித்து எந்த கருத்தும் பகிரக் கூடாது. அரசியல், மதம் சார்ந்து எந்த ஒரு தவறான கருத்துக்களையும் பகிர்வது குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் முன்னறிவிப்பின்றி கைது செய்யப்படுவார்கள். அட்மின்கள், குழு உறுப்பினர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

ட்விட்டரில் எமர்ஜென்சியை அறிவித்த எலான் மஸ்க்! இனி தினசரி எக்கச்செக்க கட்டுப்பாடுகள்... முழுவிவரம் இதோ

மேலும், “✓ - மெசேஜ் சென்று விட்டது; ✓✓ - மெசேஜ் பெறுநரை சென்றடைந்து விட்டது; இரண்டு ப்ளூ ✓✓ - மெசேஜ் பெறுநரால் படிக்கப்பட்டு விட்டது;  ✓✓✓ - அரசுக்கு அந்த மெசேஜ் பற்றி தெரிந்து விட்டது; இரண்டு ப்ளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு டிக் - அரசு உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறது; ஒரு ப்ளூ டிக் மற்றும் இரண்டு சிவப்பு டிக் - அரசு உங்கள் தகவலை சரிபார்த்துக் கொண்டிருக்கிறது; ✓✓✓ சிவப்பு டிக்குகள் - உங்கள் மீதான நடவடிக்கையை அரசு தொடங்கி விட்டது, விரைவில் சம்மன் அனுப்பப்படும்.” என்ற தகவலும் பரப்பப்படுகிறது. இவை அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த செய்திகள் அனைத்தும் போலியானவை  என தெரியவந்துள்ளது. மேற்கண்டவாறு புதிய விதிமுறைகள் சேர்க்கப்படவில்லை எனவும், ஏற்கனவே உள்ள விதிமுறைகள் மட்டுமே அமலில் உள்ளன எனவும் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios