பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு சிறைக்குச் செல்லவுள்ளதாக ஒரு யூடியூப் சேனல் வெளியிட்ட தகவல் தவறானது என PIB தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் முற்றிலும் போலியானவை என்றும் PIB கூறியுள்ளது.
டிஜிட்டல் உலகில் பரவும் தவறான தகவல்களுக்குப் பஞ்சமே இல்லாமல் போய்விட்டது. அதற்கு மற்றொரு உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் சிறைக்குச் செல்ல இருப்பதாகவும், 'a.sharmaexpress' என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
இந்த சேனல், "Abisar Express" என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டு, அவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் ஒரு வீடியோவில் தவறாகக் கூறியது.
பத்திரிகையாளர் அபிசார் சர்மா, 2020ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் சாங்கோலாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலின்போது, பிரதமர் மோடி மற்றும் இரண்டு மத்திய அமைச்சர்களுடன் இணைந்து 100வது கிசான் ரயிலைத் தொடங்கி வைத்தபோது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அந்த வீடியோவில் குற்றம் சாட்டினார்.
மேலும், சர்மா வெளியிட்ட மற்றொரு வீடியோவில், இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், பிரதமர் மோடிக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் விரைவாகப் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உண்மையை வெளிப்படுத்திய PIB:
பரவி வரும் இந்தத் தகவல்களை மறுத்து, பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ (PIB) விரைந்து ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. இந்த தகவல்கள் "முற்றிலும் போலியானவை" என்று PIB திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பொதுமக்களைத் தவறாக வழிநடத்தவும், பொதுக் கருத்தை திசை திருப்பவும் வடிவமைக்கப்பட்ட இதுபோன்ற உள்ளடக்கங்களை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
"இந்தக் கூற்று முற்றிலும் போலியானது" என்று மீண்டும் வலியுறுத்திய PIB, எஃப்.ஐ.ஆர், நீதித்துறை உத்தரவு, போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி பிரதமருக்கு எதிராக இதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை எனவும் PIB உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோல், அமலாக்கத்துறை (ED) மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு மீண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது, பரபரப்பான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சிறைக்குச் செல்லவுள்ளனர் என்ற பரவலான தகவல், எந்தவித சந்தேகமும் இன்றி, முற்றிலும் போலியானது PIB பதிவின் மூலம் உறுதியாகியுள்ளது.
