அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கடந்த 6-ந் தேதி தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதுபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். ஏற்கனவே ஜிந்தால் நில விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் கடந்த 1-ந் தேதி ராஜினாமா செய்திருந்தார். இதைத்தொடர்ந்து கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது, பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது
 
இந்த நிலையில் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அமைச்சர்களாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான எச்.நாகேசும், ஆர்.சங்கரும் நேற்று முன்தினம் வாபஸ் பெற்றனர். இதற்கான கடிதத்தை கவர்னர் வஜூபாய் வாலாவிடம் அவர்கள் வழங்கியுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனால் கூட்டணி ஆட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக குறைந்துவிட்டது. அதே வேளையில் பா.ஜனதாவின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடகா அரசியலில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத சூழலில் பிஜேபியில் அரசியலை தாறுமாறாக கிழித்துள்ள முகநூல் பதிவில் படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்... குறுக்கு வழியில் அரசாட்சியை தட்டிப்பறிப்பதுதான் ராமராஜ்யமா? இது தான் பாரதமாதாவை பாதுகாக்கும் செயலா? என கர்நாடக அரசியலை முகநூலில் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

கம்பராமாயணம் மிகவும் சிறப்பானது. தெற்காசியாவின் கலாச்சாரத்தை வடிவமைத்த மிகப்பெரிய காவியம். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மலேசியா போன்ற நாடுகளையும் ஆக்கிரமித்த பெரும் காவியம்! கம்பராமாயணத்தில் மிகவும் உன்னதமான ஒரு பகுதி நகர் நீங்கு படலம்.

கம்பராமாயணம் - நகர் நீங்கு படலம்

சூரிய குலத்து அரசன் தசரத சக்கரவர்த்தியால் ஆளப்பட்டது கோசல நாடு. அவனுக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. கோசலை மகன் ராமன். கைகேயி மகன் பரதன்.

தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவனான ராமனே ஆட்சி உரிமை பெற்றவன். ஆனால், தனது சிற்றன்னை, அவளது மகன் பரதனை மன்னனாக்க ஆசைப்பட்டதால், ராமன் தனது அரசுரிமையை விட்டுக்கொடுத்து 14 ஆண்டுகள் காட்டில் வசித்தான்.

ராமன் தனது அரசுரிமையை தனது தம்பிக்கு விட்டுக்கொடுத்த காட்சிகளை கம்பராமாயணம் நெகிழ்ச்சியாக விவரிக்கிறது:

(1) தன் மகன் மன்னனாக முடிசூட்டி வருவான் என்று காத்திருந்த தாய் கோலசையிடம் - தலையில் முடிசூடாமல், 'விதி முன்னாலும் தருமம் பின்னாலும் செல்ல' சென்றான் ராமன்:

குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்றவெண் குடையும் இன்றி, இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக

(2) காலைத் தொட்டு வணங்கும் ராமன் மணிமுடியில்லாமல் இருப்பது கண்டு கோசலை ஐயம் கொள்கிறாள். ராமனிடம் “ஏதாவது இடையூறு உண்டா?” என்கிறாள்:

“வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?’ என்றாள்”

(3) அப்போது 'தான் மன்னன் அல்ல, தனது தம்பி (கைகேயி மகன்) பரதன் தான் மன்னன்' என்பதை மறைமுகமாக சொல்கிறான் ராமன். 

(4) அதைக் கேட்ட ராமனின் தாய் கோசலை “முறையின் படி மூத்தவன் முடி சூட்டவேண்டும். அது ஒன்றுதான் குறை. மற்றபடி பரதன் உன்னைவிட நல்லவன்” என்கிறாள்.

"இந்தக் கதை எதற்காக?"

ராமன் மற்றவர்களின் உரிமையை அடித்து பிடுங்கவில்லை. மற்றவர்களின் வெற்றியை தட்டிப்பறிக்கவில்லை. தனது அரசு உரிமையையே விட்டுக்கொடுத்து காட்டுக்கு சென்றதுதான் ராமனின் காவியம். அதனால் தான் அவன் காவியத்தலைவன்.

ஆனால், இன்று கர்நாடகாவிலும், கோவாவிலும் - மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்து சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வானவர்கள் - மக்களின் அந்த முடிவுக்கு மாறாக இன்னொரு கட்சிக்கு ஆதரவளிக்கும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது! 'படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்' என்பதை செயலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குறுக்கு வழியில் அரசாட்சியை தட்டிப்பறிப்பதுதான் ராமராஜ்யமா? இது தான் பாரதமாதாவை பாதுகாக்கும் செயலா? இந்தக் கேள்விக்கு பதில் காண கம்பராமாயணத்தின் "நகர் நீங்கு படலம்" காட்சிகளை நினைத்துப் பாருங்கள்.

எச்சரிக்கை: கர்நாடகாவிலும், கோவாவிலும் நடப்பது 'சில கட்சிகள், சில மாநிலங்களின் சிக்கல் அல்ல'. அது ஜனநாயகப் பேரழிவு, இந்த ஜனநாயகப் பேரழிவுதான் இந்திய தேசத்தின் பேரழிவுக்கான தொடக்கப்புள்ளி ஆகும்!