தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையிலான பண்டைய கால ஆன்மீக தொடர்பும்; காசி தமிழ் சங்கமும் ஒரு பார்வை!!
நாட்டின் மிக முக்கியமான, பழமையான ஆன்மீக இடங்களான தமிழ்நாடு மற்றும் காசி இடையே உள்ள பழமையான தொடர்பை மீண்டும் கண்டறிந்து, மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டாடும் வகையில், வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்ச்சியான 'காசி தமிழ் சங்கமம்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பனாரஸ் பல்கலைக் கழகத்தில் துவக்கி வைக்கிறார்.
கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் உத்தரபிரதேச அரசு போன்ற பிற அமைச்சகங்களுடன் இணைந்து கல்வி அமைச்சகத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காசி தமிழ் சங்கமம் என்றால் என்ன?
ஒரு மாத கால நிகழ்வு இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு இடையேயான கலாச்சார உறவுகளை கொண்டாடும் வகையில் இந்த சங்கமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சுமார் 2,500க்கும் அதிமானோர் தமிழ்நாட்டிலிருந்து வாரணாசிக்கு குழுக்களாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த பயணத்தில் உள்ளூர் பகுதிகளுக்கு அழைத்து செல்வது, அயோத்தி, பரயாக்ராஜ் ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
கல்வி அமைச்சின் அறிக்கையின்படி, இந்த நிகழ்வின் நோக்கம் இரண்டு கலாச்சார மரபுகளை நெருக்கமாகக் கொண்டு வருவதும், "பகிரப்பட்ட பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்குவதும், பிராந்தியங்களுக்கிடையில் மக்களுக்கு இடையே இணைப்பை ஆழப்படுத்துவம் ஆகும்.
காசி தமிழ் சங்கமம்; தமிழ்நாட்டு பிரதிநிதிகளை பனாரஸில் வரவேற்கிறார் பிரதமர் மோடி!!
காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு?
புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலைத் தவிர, காசியின் பெயரைக் கொண்ட பல கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. குறிப்பாக தென்காசி, சிவகாசி ஆகிய இடங்களை குறிப்பிடலாம்.
15ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பராக்கிரம பாண்டிய மன்னன் சிவன் கோயிலைக் கட்ட விரும்பினான். லிங்கத்தை எடுத்து வருவதற்காக காசிக்குச் சென்றார். திரும்பும்பொது, ஒரு மரத்தடியில் சிறிது ஓய்வு எடுக்க முடிவு செய்தார். மீண்டும் அவர் தனது பயணத்தை மீண்டும் தொடங்க முயன்றார், ஆனால் லிங்கத்தை சுமந்த பசு நகர மறுத்தது. பல முயற்சிகளுக்குப் பிறகும் பசு அசையாதபோது, மன்னன் இது சிவபெருமானின் விருப்பம் என்று புரிந்துகொண்டு, அங்கே லிங்கத்தை நிறுவினார். அவர் லிங்கத்தை நிறுவிய இடம் சிவகாசி என்று அழைக்கப்படுகிறது.
புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல விரும்பி, செல்ல முடியாத ஒவ்வொரு பக்தருக்கும், பாண்டியர்கள் தென்மேற்கு தமிழகத்தின் தென்காசியில் காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டியுள்ளனர். இந்த இடம் தமிழகத்தின் கேரள எல்லைக்கு அருகில் உள்ளது.
இவை தவிர, தமிழில் ஆன்மீக இலக்கியங்கள் வாரணாசியைப் பற்றி பல இடங்களில் குறிப்பிடுகின்றன.
நிகழ்வு என்ன பார்க்கப்போகிறது?
"வடக்கு தெற்கு பிராந்தியங்களைச் சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள், ஆன்மீகவாதிகள், வர்த்தகர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள் மற்றும் பிற தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, அவர்களின் அறிவு, கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் தங்களது அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பளிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது, புதிய தேசிய கல்விக் கொள்கையை நவீன அறிவுசார் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
"ஐஐடி மெட்ராஸ் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் இரண்டு முகமைகளாக செயல்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி… பயணிகள் வசதிக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!!
''மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியம், கலாச்சாரம், கைவினைஞர்கள், ஆன்மிகம், பாரம்பரியம், வணிகம், தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் என 12 பிரிவுகளின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வாரணாசிக்கு எட்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தரவுள்ளனர். இவர்கள் உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக 12 வகைகளில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளில் கருத்தரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பனராஸ் பல்கலைக் கழகம் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களின் கல்வித் திட்டங்களில் இவர்கள் பங்கேற்பார்கள்" மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.