காசி தமிழ் சங்கமம்; தமிழ்நாட்டு பிரதிநிதிகளை பனாரஸில் வரவேற்கிறார் பிரதமர் மோடி!!
பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசியில் இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு மாத கால காசி தமிழ் சங்கமத்தை வரும் 19ஆம் தேதி துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பிரதிநிதிகளையும் அவர் வரவேற்கிறார்
இதுகுறித்து பனாரஸ் டிவிஷனல் கமிஷனர் கவுசல் ராஜ் சர்மா கூறுகையில், ''சங்கமம் நிகழ்ச்சியை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 19ஆம் தேதி மதியம் பனாரஸ் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு மத்திய கல்வித்துறை ஏற்பாடு செய்து இருக்கிறது. நாட்டின் வடக்கு, தெற்கு மக்களின் பண்பாட்டு, கலாச்சார உறவில் பந்தம் ஏற்படுத்தும் வகையிளும், கல்வி மற்றும் பண்பாட்டு பாரம்பரியங்களை புதுப்பிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைய இருக்கிறது. இந்த நிகழ்வின் நோக்கமும் அதுதான். தமிழ்நாட்டில் இருந்து வரும் பக்தர்களை பிரதமர் மோடி வரவேற்கிறார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் இரண்டு மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வடக்கு மத்திய மண்டலம் மற்றும் தெற்கு மத்திய மண்டலம் பண்பாட்டு மையங்களின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது.
வாரணாசியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தமிழர்கள் 200 பேர் பிரதமர் மோடியுடன் இணைந்து தமிழ்நாட்டில் இருந்து வரும் பிரதிநிதிகளை வரவேற்க உள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் நிகழ்ச்சிகளை வழங்க இருக்கின்றனர்'' என்றார்.
தமிழ்நாட்டில் இருந்து முதலில் 216 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு பனாரஸ் ரயில் நிலையத்தை வந்தடைகின்றனர். இவர்கள் முறையாக மலர்கள் தூவி வரவேற்கப்பட்டு, ஐஆர்சிடிசி-ஆல் புக் செய்யப்பட்ட ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கமத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற ரயிலை ராமேஸ்வரத்தில் இருந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதேபோல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காசிக்கு சென்ற ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து பத்திரிக்கையார்களிடம் பேசிய ஆளுநர் ரவி, ''நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கிறது. காசியில் இருப்பவர்கள் இங்கு வர வேண்டும். இங்கு இருப்பவர்கள் அங்கே செல்ல வேண்டும். ஒரே பாரதம் என்ற லட்சியக் கனவு விரைவில் நிறைவேறும். காசி இங்கிருந்து அதிக தொலைவில் இல்லை. மக்களின் உணர்வுடன் காசி இணைந்து இருக்கிறது'' என்றார்.
காசிக்கு மொத்தம் 13 ரயில்களை மத்திய ரயில்வே துறை தமிழ்நாட்டில் இருந்து இயக்குகிறது. தமிழ்நாட்டின் சார்பில் மொத்தம் 2,592 பிரதிநிதிகள் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். ராமேஸ்வரம், திருச்சி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பிரதிநிதிகளை வரவேற்கும் விதமாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தமிழில் டுவீட் செய்து இருந்தார்.