ஜெய்பூர் - மும்பை விரைவு ரயில் துப்பாக்கிச்சூடு: இழப்பீடு அறிவிப்பு!
ஜெய்பூர் - மும்பை ரயிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது

மும்பை அருகே, ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு காவலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் மற்றும் பயணிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில்வே பாதுகாப்பு காவலருக்கும், ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது.
ஜெய்பூர் - மும்பை விரைவு ரயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.01 மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியுள்ளது. சூரத் ரயில் நிலையத்துக்கு இன்று அதிகாலை 2.47 மணிக்கு வந்துள்ளது. தொடர்ந்து மும்பை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது, மும்பைக்கு 100 கி.மீ முன்பு உள்ள பால்கர் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு காவலர் சேத்தன் குமார் சவுத்ரிக்கும், ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் டிக்கா ராம் மீனா ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட்ட சண்டையின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், தன்னிடம் இருந்த துப்பாக்கியை வைத்து உயர் அதிகாரி டிக்கா ராம் மீனாவை கான்ஸ்டபிள் சேத்தன் குமார் சவுத்ரி சுட்டுள்ளார். இதையடுத்து, பக்கத்து பெட்டிக்கு சென்ற அவர், அங்கிருந்த பயணிகள் மூன்று பேரை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
போலீஸ் ஜீப்பில் மோதிய கால்பந்து.. காவல்துறையினர் செய்த வினோத செயல்..
தொடர்ந்து, ரயிலின் அபாய நிறுத்த சங்கிலியை இழுத்து தஹிசார் ரயில் நிலையம் அருகே தப்பிச் சென்றார். ஆனால், அவரை மிரா ரோடு பகுதியில் ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, போரிவளி ரயில் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ரயிலில் இருந்து மீட்கப்பட்டது.
டிக்கா ராம் மீனா தாதர் ரயில்வே போலீஸ் பிரிவை சேர்ந்தவர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சேத்தன் குமார் சவுத்ரி லோயர் பரேல் ரயில்வே போலீஸ் பிரிவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் ஜெய்பூர் - மும்பை விரைவு ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். தொலை தூர ரயில்களில் 4 முதல் 5 ரயில்வே போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுவர்.
உயிரிழந்த டிக்கா ராம் மீனாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதவிர, ரயில்வே சுரக்ஷா கல்யாண் நிதியில் இருந்து ரூ.15 லட்சமும், இறுதிச் சடங்கு செலவுகளுக்காக ரூ.20,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த மற்ற 3 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மேற்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் சுமித் தாக்கூர், அவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.