டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81) உடல்நலக்குறைவால் காலமானார்.

பஞ்சாப் மாநிலத்தின் கபூர்தலாவில் 1938-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ஷீலா தீட்சித் பிறந்தார். டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், டெல்லி பல்கலையில் வரலாற்று பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 

பின்னர், ராஜீவ்காந்தி அமைச்சரவையில், மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர். கடந்த 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லி முதல்வராக இருந்துள்ளார். 2014-ம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையில் கேரள ஆளுநராக பதவி வகித்தவர். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த ஜனவரி 10-ம் தேதி டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், நேற்று திடீரென ஷீலா தீட்சித்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி பிற்பகல் 3.30 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைக்கு காங்கிரஸ் தலைவர் மற்றும் டெல்லி முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.