தக்காளியை உணவுப் பட்டியலில் இருந்து பர்கர் கிங் இந்திய விற்பனை நிலையங்கள் தற்காலிகமாக நீக்கியுள்ளது
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி விளைச்சல் குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தக்காளி கிலோ ஒன்று ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இடையில் சற்றி குறைந்த தக்காளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தக்காளி விலை உயர்வால், பர்கர் கிங்கின் இந்திய விற்பனை நிலையங்கள் தக்காளியை தங்களது மெனுவில் இருந்து அதனை தற்காலிகமாக அகற்றியுள்ளது. இதற்கு இதுபோன்று மற்ற துரித உணவு விற்பனை நிறுவனங்களும் தக்காளியை தங்களது உணவுப் பட்டியலில் இருந்து நீக்கியது என்பது கவனிக்கத்தக்கது.
தலைநகர் டெல்லியில் உள்ள பர்கர் கிங்கின் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், “தக்காளிகளுக்கும் விடுமுறை வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. “தக்காளியின் தரம் மற்றும் விநியோகத்தில் கணிக்க முடியாத நிலைமைகள் காரணமாக, எங்களால் உணவில் தக்காளியை சேர்க்க முடியவில்லை. எங்கள் பர்கர்களில் தக்காளியை மீண்டும் சேர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பர்கர் கிங் நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்து அமைப்புகளின் ஆட்சேபனைகளால், வழக்கமான மாட்டிறைச்சி பர்கர்களுக்கு பதிலாக கோழி இறைச்சி மற்றும் சைவ பர்கர்களை பர்கர் கிங் வழங்கி வருகிறது. பல்வேறு துரித உணவு விற்பனை நிறுவனங்கள் தக்காளியை தங்களது மெனுவில் இருந்து நீக்கிய நிலையில், அந்த வரிசையில் பர்கர் கிங்கும் இணைந்துள்ளது.
பெண் எம்.பியை வசைபாடிய ரவீந்திர ஜடேஜா மனைவி: குஜராத்தில் பாஜகவில் சலசலப்பு!
முன்னதாக, தக்காளியை மெனுவில் இருந்து அகற்றுவதாக மெக்டொனால்டு இந்திய நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. அதே மாதத்தில் தரம் குறைபாடு காரணமாக அமெரிக்க சாண்ட்விச் நிறுவனமான சப்வே, தங்களது மெனுவில் இருந்து தக்காளியை தற்காலிகமாக அகற்றியது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வரவு செலவுத் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இது மேலும் மோசமாகும் எனவும் கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது. மோசமான வானிலை மற்றும் தக்காளியை உற்பத்தி செய்யும் முக்கிய பெல்ட்டுகளில் பூச்சி தாக்குதல்களால் அவற்றின் விலை உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
உணவுப் பொருட்களின் விலையில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க உதவும் வகையில் அண்டை நாடான நேபாளத்தில் இருந்து தக்காளி இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
