முத்தலாக் விவாகரத்து முறை தொடர்பான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. முத்தலாக் விவாகரத்து நடைமுறை, இஸ்லாமிய அடிப்படை கோட்பாட்டுக்கு உட்பட்டதுதானா என்பது முதலில் தீர்மானிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.

முத்தலாக் முறையை எதிர்த்து தொடரப்பட்ட 7 மனுக்கள் மீது நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. இதில் முத்தலாக் முறைக்கு எதிராக 5 பெண்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களும் அடங்கும்.

அந்த மனுக்களில் அவர்கள் முத்தலாக் விவாகரத்து முறை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளனர்.

மத ரீதியான தனிநபர் சட்டங்களை அரசியலமைப்புச் சட்ட வரம்புக்குள் கொண்டுவர முடியாமா என்பதை பரிசீலிக்குமாறு மத்தியஅரசு தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான, குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன், யு.யு. லலித், அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த 5 நீதிபதிகளும் சீக்கிய, முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, பார்சி ஆகிய 5 மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் பின்பற்றிவரும் முத்தலாக் விவாகரத்து முறை, மதம் தொடர்பான அடிப்படை உரிமையின் வரம்புக்கு உட்பட்டதுதானா என ஆய்வு நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்,.

ஒரு மதத்தில் கடைபிடிக்கப்பட்டுவரும் இந்த தனிநபர் சட்டங்களை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டுவருவது சாத்தியமா என்பதை உச்சநீதிமன்றம் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

ஆனால் அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி இந்த் ஆகிய அமைப்புக்கள் முத்தலாக் முறையை ஆதரிக்கின்றன.

இரு தரப்பினருக்கும், தங்களது வாதத்தை முன்வைக்க , தலா 2 நாட்களை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதனை விவாதிக்க ஒரு நாளும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே வாதத்தை திரும்ப கூறக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படும் பலதார மணம் மற்றும் நிக்கா ஹலாலா உள்ளிட்ட நடைமுறைகளுக்கு எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம் பெண்களின் சமத்துவத்திற்கான தேடல்- என்ற தலைப்பில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது,

முஸ்லிம் பெண்கள் முத்தலாக் முறையால் பாலின பாகுபாட்டுக்கு உள்ளாகின்றனரா அல்லது விவாகரத்து செய்த கணவன் மறுமணம் செய்வதால் பாலின பாகுபாட்டுக்கு உள்ளாகிறார்களா என்பது பற்றியும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து முடிவெடுக்க உள்ளது,

கடந்த ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் முத்தலாக் பிரச்சனை தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், முத்தலாக் முறை ஒருதலைப்பட்சமானது என்றும் இது ஒரு மோசமான சட்டம் என்றும் கூறியிருந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.