Asianet News TamilAsianet News Tamil

பொறியியல் படிப்பு.. பிராந்திய மொழிகல்வி..மாணவர்கள் ஆர்வம் காட்டாதது ஏன்..? வெளியான அதிர்ச்சி தகவல்..

2021-22-ஆம் கல்வியாண்டில் பிராந்திய மொழி வழி பொறியியல் படிப்புகளுக்கான 1,230 இடங்கள் ஒதுக்கப்பட்டதில், வெறும் 255 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
 

Engineering course in regional language
Author
India, First Published Jan 16, 2022, 4:26 PM IST

பொறியியல் கல்லூரிகளில் ஆங்கில மொழியில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், 2021- 22ஆம் கல்வி ஆண்டு முதல் பிராந்திய மொழிகளிலும் பொறியியல் படிக்கலாம் என்று ஏஐசிடிஇ ஒப்புதல் வழங்கியது.அதன்படி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, வங்காளம் என 7 பிராந்திய மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. 

பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதில், 44 சதவீத மாணவர்கள் பிராந்திய மொழிகளில் படிக்க விரும்புவதாகத் தெரிவித்ததாகவும் அதையொட்டியே பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்பு அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பங்கள் அளித்த நிலையில், முதற்கட்டமாக 19 கல்லூரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதில் இந்தி மொழிக்கென 8 கல்லூரிகளுக்கும், மராத்திய மொழிக்கு 2 கல்லூரிகளுக்கும், தெலுங்கு, வங்காள, கன்னட மொழிகளுக்குத் தலா 1 கல்லூரி உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், மின் மற்றும் மின்னணு பொறியியல் என 3 பிரிவுகளிலும், கோவை ரத்தினம் தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல் பாடப்பிரிவிலும் தமிழ் வழியில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2021-22ஆம் கல்வி ஆண்டில் பிராந்திய வழி பொறியியல் படிப்புகளுக்கான 1,230 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 255 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. அதாவது 21 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்துத் தனியார் செய்தித் தளம் ஒன்றில் ''இந்தி மொழியில் 116 மாணவர்கள் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ளனர். மராத்தியில் 60 மாணவர்களும், தமிழில் 50 மாணவர்களும், வங்காள மொழியில் 16 மற்றும் தெலுங்கு மொழியில் 13 பேரும் பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்பைப் படிக்கின்றனர். எனினும் கன்னட மொழியில் ஒருவர்கூடப் பொறியியலைத் தேர்வு செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் கூறும்போது, ''பிராந்திய மொழிகளில் படிக்கப் பாடப் புத்தகங்கள் இருக்காது என்று மாணவர்கள் நினைப்பதால் மாணவர் சேர்க்கை குறைந்திருக்கலாம் என்று நம்புகிறேன். பொறியியலைப் பாடத்தை ஆங்கிலத்தைத் தவிர, பிற மொழிகளிலும் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் எனில், பாடப்புத்தகங்கள் உள்ளது என்னும் நம்பிக்கையை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும். 

இதற்காக ஏஐசிடிஇ அனைத்து பிராந்திய மொழிகளிலும் புத்தகங்களைத் தயாரித்துள்ளது. அனைத்துத் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவசமாக அந்தப் புத்தகங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
எந்த ஒரு புதிய திட்டத்துக்கும் ஆரம்பத்தில் தயக்கம் இருக்கும். பிறகு மெல்ல மெல்ல வெற்றிகரமாக நடைபெறும்'' என்று ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே கூறும்போது, ''மாணவர் சேர்க்கை மெல்ல மெல்ல அதிகரிக்கும்'' என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios