வாஷிங் மெஷினில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி பணம்.. அமலாக்கத்துறை பறிமுதல்..
அந்நிய செலாவணி சட்டத்தை மீறிய வழக்கில் வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.54 கோடியை அமலாக்க துறை பறிமுதல் செய்துள்ளது
அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், கடந்த சில நாட்களாக டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா மற்றும் ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்ரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். கேப்ரிகார்னியன் ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், (Capricornian Shipping and Logistics Pvt Ltd), லக்ஷ்மிடன் மேரிடைம், (Laxmiton Maritime) , ஹிந்துஸ்தான் இண்டர்நேஷனல் ( Hindustan International). ராஜ்நந்தினி மெட்டல் லிமிடெட் ( Rajnandini Metals) உட்பட பல நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் இந்த நிறுவனங்களின் இயக்குனர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் இந்த நிறுவனங்களின் பங்குதாரர்களான விஜய் குமார் சுக்லா, சஞ்சய் கோஸ்வாமி, சந்தீப் கார்க் மற்றும் வினோத் கேடியா உள்ளிட்டோர் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளனர். இந்த சோதனையின் போது தான் வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.54 கோடியை அமலாக்க துறை (ED) பறிமுதல் செய்துள்ளது..இருப்பினும், வாஷிங் மிஷினில் வைத்திருந்த பணம் எங்கிருந்து மீட்கப்பட்டது என்ற தகவலை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.
இந்த நிறுவனங்கள் அந்நிய செலாவணி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர்கள் சிங்கப்பூரின் கேலக்ஸி ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஹொரைசன் ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.1,800 கோடி அளவுக்கு பணத்தை அனுப்பி உள்ளனர் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இந்த இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களும் அந்தோனி டி சில்வா என்ற நபரால் நிர்வகிக்கப்படுகின்றன. Capricornian Shipping and Logistics, Laxmiton Maritime மற்றும் அவர்களது கூட்டாளிகள், போலி சரக்கு சேவைகள் மற்றும் இறக்குமதிகள் என்ற போர்வையில் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.1,800 கோடிபணம் அனுப்பியுள்ளனர்.
இந்த பரிவர்த்தனைகள் நேஹா மெட்டல்ஸ், அமித் ஸ்டீல் டிரேடர்ஸ், டிரிபிள் எம் மெட்டல் மற்றும் அலாய்ஸ் மற்றும் எச்எம்எஸ் மெட்டல்ஸ் போன்ற போலி நிறுவனங்களின் உதவியுடன் சிக்கலான பரிவர்த்தனைகள் மூலம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அமலாக்கத்துறை நடத்திய போது பண மோசடி தொடர்பான ஆவணங்களும் டிஜிட்டல் சாதனங்களும் கைப்பற்றப்பட்டன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மொத்தம் 47 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.