எப்போ இடிஞ்சி விழும்-ன்னு தெரியல... மரண பயத்தில் அரசு ஊழியர்கள்... ஹெல்மேட் அணிந்தவாறே வேலை பார்க்கும் பரிதாபம்...!

உத்தரப்பிரதேசத்தில் அரசு அலுவலகத்தில் பாழடைந்த கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளதால், அச்சமடைந்துள்ள ஊழியர்கள் ஹெல்மட் அணிந்து கொண்டு பணிபுரியும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாண்டா மாவட்டத்தில் உள்ள மின்சாரத்துறை அலுவலகம் மிகவும் பாழடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. கான்கீரிட் மேற்கூரைகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழாலாம் என்ற நிலையில் உள்ளதால் ஊழியர்கள் அனைவரது மத்தியிலும் மரண பயம் காணப்படுகிறது. கட்டிடத்தின் உள்புறத்தில் உள்ள தூண்கள் மட்டுமே மேற்கூரையை தாங்கி நிற்பதால் ஊழியர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக அங்கு பணிபுரிய வரும் ஊழியர்கள் அனைவரும் தினமும் ஹெல்மட் அணிந்தே வேலை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் தங்களது தலையை பாதுகாத்து கொள்வதற்காக தலைக்கவசம் அணிந்து கொண்டு தான் உள்ளே நுழைகிறார்கள். இந்த அவலநிலை குறித்து பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உயர் அதிகாரிகள் யாரும் இதுகுறித்து சட்டை செய்யவில்லை என்றும் ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

மேலும் மிகவும் பழைய கட்டடம் என்பதால் கூரை வழியாக மழை நீர் ஒழுகி, அலுவலகமே நீச்சல் குளம் போல காட்சியளிக்கும் அவலமும் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஊழியர்கள், "மழைக் காலத்தில் அலுவலகத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், ஆனால் எங்களால் கடமையை விட்டுவிட்டு ஓட முடியாது. அதுபோன்ற சமயங்களில் ஹெல்மட்டிற்கு பதிலாக குடைகளை கையில் பிடித்துக் கொண்டு பணிபுரிவோம்" என்று கூறுகின்றனர். தினமும் தங்களது உயிரைப் பணயம் வைத்து ஆபத்துடன் மல்லு கட்டும் ஊழியர்கள் ஹெல்மட் அணிந்து வேலை பார்க்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.