ஏர்செல் நிறுவன ஊழியர்களை இந்த மாதத்துடன் வேலையை விட்டு செல்லுமாறு கூறியதை அடுத்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 மாத ஊதியத்தினை நிர்வாக தரப்பில் அளிக்கக் கோரியும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடியில் திணறி வரும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் குஜராத், மகாராஷ்டிரா, அரியனா, இமாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் தன் சேவையை நிறுத்திக் கொள்ளப்போவதாக ட்ராயிடம் ஏர்செல் அறிவித்திருந்தது. 

இதனால், கடந்த சில நாட்களாக, தமிழகம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் கிடைக்காமல் அவதிபட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்செல் நெட்வொர்க்கின் சிக்னல் முழுமையாக தடைபட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், ஏர்செல் கிளை நிறுவனஙகளை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ஏர்செல் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். 

ஏர்செல் நெட்வொர்க் கிடைக்காத நிலையில், வேறு நொட்வொர்க் சேவைக்கு மாறத் தொடங்கினர். இந்த நிலையில், தன் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஏர்செல் விண்ணப்பத்தது.

ஏர்செல் வாடிக்கையாளர்கள், வேறு ஒரு நெட்வொர்க் சேவை பெறும் வரை ஏர்செல் நீட்டிக்கப்பட வேண்டும் என்று, சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய
தொலைத்தொடர்பு துறை, ஏர்செல் நிறுவனம் மற்றும் தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் நெட்வொர்க் கிடைக்காத நிலையில் வாடிக்கையாளர்கள் ஏர்செல் கிளை நிறுவனத்தை முற்றுகையிட்டு வரும் வேளையில், புதுச்சேரியில் உள்ள ஏர்செல் கஸ்டமர் கேரில் பணிபுரிபவர்களிடம் இந்த மாதத்துடன் பணியைவிட்டு செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 3 மாத ஊதியத்தினை நிர்வாக தரப்பில் தரக்கோரியும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.