14-வது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்காக  நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டசபையிலும் நேற்று நடந்த தேர்தலில் 99 சதவீத வாக்குப்பதிவு நடந்தது என்று தேர்தல் அதிகாரி அனுப் மிஸ்ரா தெரிவித்தார். 

இதையடுத்து நாளைமறுநாள்(20-ந்தேதி) காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தேர்தல்

ஜூலை 24-ந் தேதியோடு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 14-ந் தேதி அறிவிக்கை வௌியிட்டது. இதையடுத்து, நேற்று ( 17-ந் தேதி) நாடாளுமன்றத்திலும், மாநிலங்களில் சட்டசபையிலும் தேர்தல் நடந்தது.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரும், பீகார் ஆளுநராக இருந்தவருமான ராம் நாத் கோவிந்த் களமிறக்கப்பட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் போட்டியிட்டார்.

32 வாக்கு மையங்கள்

இதையடுத்து, நேற்று நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க மொத்தம் 32 வாக்கு மையங்களும், சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

இந்த தேர்தலில் மொத்தம் 4,120 எம்.எல்.ஏ.க்களும், 776 எம்.பி.க்களும்வாக்களிக்க இருந்தனர். வாக்குப் பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது.

முதல் வாக்கு

நாடாளுமன்றத்தில் உள்ள வாக்குப் பதிவு மையத்துக்கு முதல் மனிதராக பிரதமர் நரேந்திர மோடி வந்து தனது வாக்கை  பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து வந்த பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தனது வாக்கைப் பதிவு செய்தார்.

ராகுல், சோனியா

ஆந்திர மாநில சட்டசபைக்கு முதலாவதாக வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது வாக்கைப் பதிவு செய்தார். காங்கிரஸ் தலைவர சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நண்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் வந்தனர். வரிசையில் நின்ற இருவரும் தங்களின் வாக்கை பதிவு செய்து சென்றனர். வாக்குப்பதிவு மாலை 5.05 மணி வரை நடந்தது.

99 சதவீதம்

வாக்குப்பதிவு முடிந்தபின், மக்களவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான அனுப் மிஸ்ரா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது-

14-வது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்காக நடந்த தேர்தலில் 99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் 20-ந் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும்.

771 எம்.பி.கள்

ஒட்டுமொத்தமாக மக்களவை, மாநிலங்கள் அவையில் 776 எம்.பி.க்களில், 771 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். மாநிலங்கள், மக்கள்அவையில் தலா 2 இடங்கள் காலியாகவும், பா.ஜனதா எம்.பி. சேடி பஸ்வான்வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.

54 எம்.பி.க்களுக்கு சலுகை

டெல்லி நாடாளுமன்றத்தில் 717 எம்.பி.க்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், 714 எம்.பி.க்கள் மட்டுமே வாக்கைப் பதிவு செய்தனர். 54 எம்.பி.க்கள் மாநில சட்டசபைகளில் வாக்களிக்க அனுமதி பெற்று இருந்தனர். இதில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், உ.பி. முதல்வர் யோகிஆதித்யநாத், மத்திய அமைச்சர் உமா  பாரதி ஆகியோர் சட்டசபைகளில் வாக்களித்தனர்.

குஜராத் மாநில எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா டெல்லியிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள்அனைவரும் கொல்கத்தாவில் வாக்களிக்க அனுமதி பெற்று இருந்தனர்.

நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி முதல் மனிதராக வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

3 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தபாஸ் பால், பிஜூ ஜனதா தளம் எம்.பி. ராம்சந்திர ஹன்ஸ்தக், பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாக்களிக்க வில்லை.

100 சதவீதம்

அருணாச்சலப்பிரதேசம், சட்டீஸ்கர், அசாம், குஜராத், பீகார், ஹரியானா,இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், நாகாலாந்து, உத்தரகாண்ட், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது.

அதே சமயம், ஆந்திரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், மற்றும் திரிபுரா மாநிலங்களில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்கவில்லை. மற்ற மாநிலங்களில் ஏறக்குறைய 100 சதவீதத்தை நெருங்கியே வாக்குப்பதிவு நடந்தது.

8 சுற்றுக்கள்

வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வரும் 20-ந் தேதி காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் நாடாளுமன்றத்தின் வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணப்படும், அதன்பின், ஆங்கில அகரவரிசைப்படி ஒவ்வொரு மாநிலத்தின் வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். இதற்காக தனித்தனியாக 4 மேஜைகள் போடப்படும், 8 சுற்றுக்களாக வாக்கு எண்ணப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.