மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக, தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லியில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

அண்மையில் நிறைவடைந்த பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியமைத்தது.

இதனையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.

அத்துடன், கடந்த மாதம் நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் தோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்தியது.

அரசியல் கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து வரும் இந்திய தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்றால் அதனை நிரூபித்துக் காட்டும்படி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கட்சிகளுக்கு சவால் விடுத்திருந்தது. 

இந்நிலையில், தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக, டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இக்கூட்டத்தில், பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசிய கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட 48 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில்  டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு தில்லுமுல்லு செய்ய முடியும் என செயல்முறை விளக்கம் அளித்ததை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.