உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் சுபாஷ் யாதவும் பிபிகன்ஞ் சந்தை பகுதியை சேர்ந்த ஒருவரும் நண்பர்கள். நேற்று அவர்கள் இருவரும் முட்டை சாப்பிடுவது குறித்து பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் முட்டை சாப்பிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. இதனையடுத்து யார் 50 முட்டை சாப்பிடுகிறார்கள் என அவர்கள் இருவரும் ரூ.2,000 முட்டை பந்தயத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சுபாஷ் யாதவ் முட்டையை சாப்பிட தொடங்கினார். வேகம் வேகமாக 41 முட்டைகளை சாப்பிட்ட யாதவ் 42வது முட்டையை சாப்பிடும்போது நிலைகுலைந்து கீழே விழுந்தார். 

சுயநினைவில்லாமல் விழுந்து கிடந்தவரை அருகில் இருந்தவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இருந்த டாக்டர்கள் சஞ்சய் காந்தி போஸ்ட் கிராஜிவேட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தினர்.

இதனையடுத்து யாதவை அங்கு கொண்டு சென்றனர். ஆனால் சில மணி நேரங்கள் கழித்து யாதவ் இறந்து விட்டார். அதிகமாக சாப்பிட்டதால் யாதவ் உயிர் இழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து யாதவ் குடும்பத்தினர் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்