புகாருக்கெல்லாம் ராஜினாமா செய்வது என்றால், யாருமே அமைச்சராக இருக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பிரதமர் சந்திப்புக்குப் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், மக்களவை துணை தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை அளிக்க வேண்டும் என்றும், தேவையான நிதியை தமிழகத்துக்கு வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். மேலும் அவர் பேசியதாவது: சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயரிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை மானியங்களை விரைந்து வழங்க வேண்டும். 

மதுரை. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகரத்தின் நிரந்தர வெள்ளத்தடுப்பு கட்டமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் சுமார். 4445 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து,  வெள்ளத்தடுப்பு பணியை மேற்கொள்ள உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் உரிமை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் கர்நாடக அரசின் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. ரூ.7,600 கோடி மதிப்பீட்டில், மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள காவிரி நீர் பாசன மேம்பாட்டு மற்றும் மறுவாழ்வு திட்டத்துக்கு உரிய அனுமதியும் நிதியும் அனுமதிக்க வேண்டும். 

புயலினால் காணாமல் பேகும் மீனவர்களை மீட்டுவர ஏதுவாக, கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய புதய நிரந்தர கப்பல்படை தளம் அமைக்க வேண்டும்.சேலம் உருக்காலையில் பயன்படுத்தாமல் உள்ள காலி நிலத்தில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க வேண்டும். ஒசூர், நெய்வேலி, ராமநாதபுரத்துக்கு விமான போக்குவரத்துக்கு விரைந்து செயல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி உள்ளேன். அந்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதமர் மோடி பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

இதன் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி 
எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் குறித்து முழு விளக்கத்தையும் 
தெரிவித்துள்ளார். புகாருக்கு எல்லாம் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், யாருமே அமைச்சராக இருக்க முடியாது. எனவே அது பற்றி பேச வேண்டியதில்லை என்றார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு  கூட்டணி குறித்து முடிவு செய்வோம். காவிரியில் கர்நாடக அரசு அணை கட்ட வேண்டுமென்றால், தமிழக அரசின் அனுமதி பெறாமல் கட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.