பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகள்.. மாலத்தீவின் அனைத்து விமான முன்பதிவுகளையும் சஸ்பெண்ட் செய்த EaseMyTrip..
பிரதமர் மோடிக்கு எதிரான பதிவுகள் காரணமாக மாலத்தீவின் அனைத்து விமான முன்பதிவுகளையும் EaseMyTrip நிறுத்தி வைத்துள்ளது.
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவின் சில அமைச்சர்கள் அவதூறு கருத்துகள் தெரிவித்ததை தொடர்ந்து EaseMyTrip, இந்தியா அனைத்து மாலத்தீவு விமான முன்பதிவுகளையும் இடைநிறுத்த முடிவு செய்துள்ளது. இந்திய ஆன்லைன் பயண நிறுவனமான EaseMyTrip-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) நிஷாந்த் பிட்டி, X சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில், "எங்கள் தேசத்துடன் ஆதரவாக ஒற்றுமையாக துணை நிற்கிறோம். EaseMyTrip அனைத்து மாலத்தீவு விமான முன்பதிவுகளையும் இடைநீக்கம் செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட EaseMyTrip நிறுவனம், 2008 இல் நிஷாந்த் பிட்டி, ரிகாந்த் பிட்டி மற்றும் பிரசாந்த் பிட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது.
முன்னதாக ஜனவரி 4 அன்று பிரசாந்த் பிட்டி தனது பதிவில், "லட்சத்தீவின் நீர் மற்றும் கடற்கரைகள் மாலத்தீவுகள்/சீஷெல்ஸ் போன்ற இடங்களுக்கு நிகராக சிறந்த இடங்கள். EaseMyTrip இல் நாங்கள் நமது பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பார்வையிட்ட இந்த அழகிய இடத்தை விளம்பரப்படுத்த அற்புதமான சிறப்பு சலுகைகளை வழங்குவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான சலசலப்புக்கு மத்தியில், #BoycottMaldives என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது, பல இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு திட்டமிடப்பட்ட விடுமுறையை ரத்து செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
'மனசு விட்டுப் போச்சு... நான் சாவதே மேல்...' நீதிமன்றத்தில் கண்ணீர் விட்ட நரேஷ் கோயல்!
மாலத்தீவு அரசியல்வாதிகள் தொடங்கிய சர்ச்சை
பிரதமர் மோடி குறித்து இழிவான கருத்து தெரிவித்ததற்காக மாலத்தீவு அமைச்சர்கள் மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலத்தீவு அரசாங்கத்திடம் இந்தியா இந்த விஷயம் தொடர்பாக கவலை தெரிவித்ததை அடுத்து இந்த இடைநீக்கம் வந்துள்ளது. இந்த மூன்று அமைச்சர்களைத் தவிர, மற்ற மாலத்தீவு அதிகாரிகளும், எம்.பி. ஜாஹித் ரமீஸ் உட்பட, பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை கேலி செய்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்த சர்ச்சை வெடித்தது.
இந்திய பிரபலங்கள் எதிர்வினை
மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, பல பிரபலங்கள் மாலத்தீவுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக உள்நாட்டு சுற்றுலாத் தலங்களை ஆராயுமாறு X வலைதளத்தில் மக்களை வலியுறுத்தியுள்ளனர். நடிகர்கள் சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் "இந்திய தீவுகள்" மற்றும் கடலோர இடங்களுக்குச் செல்லுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபலங்களில் அடங்குவர்.
பிரதமர் மோடியை கேலி செய்த அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்த மாலத்தீவு அரசு
சமூக ஊடகப் பதிவுகளில், அக்ஷய் குமார், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, முன்னாள் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் வீரேந்திர சேவாக் மற்றும் பலர், மாலத்தீவு அமைச்சர்களின் வெறுக்கத்தக்க" மற்றும் "இனவெறி" கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்..
மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் என்ன தெரிவித்துள்ளது?
இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான அனைத்து அறிக்கைகளையும் நிராகரித்துள்ள மாலத்தீவு அரசு, அவை மாலத்தீவு அரசின் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.. வெளிநாட்டு தலைவர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் "இழிவான கருத்துக்கள்" இருப்பதை அரசாங்கம் அறிந்திருப்பதாகவும், அவை அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் தான் எனவும், அரசின் கருத்துகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்றும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.