ராஜஸ்தான் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம் - அலறியடித்து ஓடிய மக்கள்
ராஜஸ்தானிலும், அருணாச்சல பிரதேசத்திலும் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓடி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அம்மாநிலத்தின் சங்லாங் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.
அதேபோல் ராஜஸ்தானிலும் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓடி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படியுங்கள்... சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அருணாச்சல பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அதிகாலை 2.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த நிலநடுக்கங்களால் எந்தவித பாதிப்பும், சேதமும் நிகழவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வடமாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா... தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம்!!