பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம்.. முழு விவரம் உள்ளே..
நாட்டின் பல மாநிலங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 70 கி.மீ தொலைவில் காலை 10.19 மணியளவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 223 கிமீ ஆழத்தில் உருவானது, இது அதன் பேரழிவு தாக்கத்தை கணிசமாகக் குறைத்தது என்று இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 11:19 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத், பெஷாவர், ஸ்வாட், ஹரிபூர், மலகண்ட், அபோதாபாத், பத்கிராம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், டெக்ஸ்லியா, பிண்ட் தாதன் கான் என பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. பாகிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கங்களை வெவ்வேறு அளவுகளில் சந்திக்கிறது. 2005ல் பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 74,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இதனிடையே நேற்று முன் தினம் டோக்கியோ மற்றும் கிழக்கு ஜப்பானின் பிற பகுதிகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது, ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. சிபா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் 44.5 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிபா மற்றும் இபராக்கி மாகாணங்களில் வலுவான நடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாகிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவு.. 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு.. 25 பேரின் நிலை என்ன?