பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பால் பதற்றம் - பொதுமக்கள் அவதி 

இன்று இரவு முதல் கிரெடிட் கார்டு ,டெபிட் கார்டு ஏற்கப்படாது என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பங்குகளை நோக்கி வாகன ஓட்டிகள் படையெடுக்க துவங்கி உள்ளனர்.

வாழ்க்கை வாழ்வதற்கு எப்படி ஆக்சிஜன் அவசியமோ , அதே போல் வாழ்க்கை நடத்துவதற்கு மின்சாரமும் , எரிபொருளும்  அவசியம். மின்சாரமே எரிபொருள் இருந்தால் தான் இயங்கும் என்ற நிலையும் உண்டு.

இப்படிப்பட்ட முக்கியமான அங்கமான பெட்ரோல் , டீசலை நம்பித்தான் பொதுமக்கள் இயக்கம் ,வியாபாரம் , போக்குவரத்து அனைத்தும் உண்டு. கடந்த நவம்பரில் அறிவித்த பண மதிப்பிழப்பு அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் அடியும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

பணத்தை ரொக்கமாக பார்த்தே மாசம் மூன்று ஆகிவிட்டது. சம்பள பணத்தை கூட வங்கி அதிகாரிகள் அனுமதித்தால் மட்டுமே எடுக்க கூடிய நிலை. அதனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் காசில்லா வர்த்தகத்துக்கு மாறிவிட்டனர். அதாவது கிரெடிட் டெபிட் கார்டு வர்த்தகத்திற்கு,

தினசரி பெட்ரோல் டீசல் போடவும் அனைத்து பங்குகளிலும் கிரெடிட் டெபிட் கார்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இன்று நள்ளிரவு முதல் பணமிருந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் என்ற பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு பொதுமக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தினசரி இயக்கும் மோட்டார் சைக்கிள் , கார் , ஆட்டோ போன்றவற்றிற்கு பெட்ரோல் டீசல் போட பணத்திற்கு எங்கே போவது எனபது வாகன ஓட்டிகளின் கேள்வியாக உள்ளது.

மறுபுறம் வியாபாரத்திற்கு சரக்கு போக்குவரத்து முக்கியம். தினமும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டீசல் போடும் லாரி போக்குவரத்துக்கு இந்த அறிவிப்பு கடுமையான நெருக்கடியை கொடுத்துள்ளது.

அனைத்தும் பணமில்லா வர்த்தகம் எனும் போது லாரி டிரைவர்களுக்கு , முதலாளிகளுக்கு மட்டும் பணம் எங்கிருந்து கிடைக்கும் ஆகவே லாரிகளை இயக்குவது சிரமம் என்று கூறியுள்ளனர். இதே போன்று தான் சிறு வாகனங்கள் சரக்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கும். இதனால் பொதுமக்கள் வாழ்க்கை மீண்டும் கடுமையான நெருக்கடியை சந்திக்க உள்ளது.