ஊழலை ஒழிப்பதில் பின்வாங்க மாட்டேன். கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். டிசம்பர் 30 வரை பொறுத்திருங்கள். நீங்கள் விரும்பும் இந்தியாவை உங்களுக்கு அளிப்பேன் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்தார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசிய மோடி, பேச்சின் நடுவே கண்கலங்கினார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை நான் உணர்ந்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.

கோவா மாநிலம் பனாஜியில், விமான நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, "எலெக்ட்ரானிக் சிட்டி' திட்டத்தின் தொடக்க விழா ஆகியவற்றில் பிரதமர் நேற்று மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு நாட்டை கொள்ளையடித்து வந்தவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது இத்துடன் முடிந்துவிட போவதில்லை. இது ஒரு தொடக்கம்தான்.

கருப்புப் பணம், ஊழல், லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும். அதற்காக பல திட்டங்கள் மத்திய அரசிடம் உள்ளன. முறைகேடாக பணம் ஈட்டியவர்களும், கருப்புப் பணத்தைக் குவித்தவர்களும் அதற்கான எதிர்வினையை சந்தித்தாக வேண்டும். இந்தியாவை ஊழலற்ற நாடாக மாற்றிக் காட்டுவோம்.

பினாமி சொத்து ஒழிக்கப்படும். அடுத்ததாக பினாமிகளின் பெயரில் சொத்து சேர்த்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இது கருப்புப் பணம் வைத்திருப்போருக்கும், முறைகேடாக பணம் ஈட்டியவர்களுக்கும் மிகப்பெரிய அடியாக இருக்கும். இந்தியாவைச் சுரண்டி கொள்ளையடித்த பணத்தை மீட்டு நாட்டு நலனுக்காக அர்ப்பணிக்க இருக்கிறோம்.

2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு ஊழல்களில் ஊறித் திளைத்தவர்கள் இப்போது 4000 ரூபாயை மாற்ற வரிசையில் நிற்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் 25 பைசாவை ஒழித்தார்கள்.

அப்போது நாங்கள் அதை எதிர்த்தோமா? ஏனென்றால் காங்கிரஸால் அதை மட்டும்தான் செய்ய முடியும். அதுதான் அவர்களது அதிகார வரம்பு. அவர்களால் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற முடியவில்லை. ஆனால், பாஜகவுக்கு அந்தத் துணிவு உண்டு.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஊழல், முறைகேடுகளுக்கு எதிராகத்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். இப்போது மக்கள் நலன் கருதி கருப்புப் பணத்துக்கும், முறைகேடுகளுக்கும் எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

மத்திய அரசின் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை நான் உணர்ந்துள்ளேன். வங்கிகளின் வாசல்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கஷ்டத்தை உங்களுக்கு அளித்ததற்காக என்னை கொடூரமாக நடந்து கொள்பவன் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். இந்த சிரமத்தை வரும் டிசம்பர் 30ம் தேதி வரை பொறுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு மக்கள் விரும்பும் இந்தியாவை உங்களுக்கு அளிப்பேன் என்றார்.