ஆந்திர மாநிலத்தில், ஒரு மருத்துவமனையின் பெண் அதிகாரியை விரட்டிச் சென்று எய்ட்ஸ் ரத்தம் நிரப்பிய ஊசியை டாக்டர்  போட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டியதால் ஆத்திரம் அடைந்த டாக்டர் இந்த திடீர் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புரோட்டுடூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் டேவிட் ராஜூ.

வழக்கம் போல மருத்துவமனைக்கு வந்த இவர், கையில் ரத்தம் நிரப்பிய ஒரு சிரிஞ்சுடன் மருத்துவமனை கண்காணிப்பாளரான, டாக்டர் லட்சுமி பிரசாத் அறைக்குச் சென்றார்.

இதை மற்ற டாக்டர்கள் சிலர் பார்த்துக்கொண்டிருந்தனர். வேகமாக சென்ற டேவிட் ராஜூ, டாக்டர் லட்சுமி பிரசாத் மீது அந்த ஊசியை செலுத்த முயன்றார்.

அங்கிருந்தவர்கள், அவரைத் தடுத்து லட்சுமி பிரசாத்தை காப்பாற்ற முயன்றனர். உடனே அங்கிருந்து வேகமாக சென்ற லட்சுமி பிரசாத்தை, டேவிட் ராஜு விடாமல் விரட்டிச் சென்று ஊசியை அவருடைய உடலில் செலுத்த முயன்றார்.

அதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரைப் பிடித்து ஊசியில் இருந்த ரத்தத்தை வெளியேற்றினர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் டேவிட் ராஜூவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கையில் இருந்த ஊசியில் நிரப்பட்டிருந்தது, எச்.ஐ.வி. (எய்ட்ஸ்) பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் என்று தெரிய வந்தது.

பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டி தன்னை ஓரம் கட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கண்காணிப்பாளரை பழிவாங்குவதற்காக, அவர் மேல் ஊசியை செலுத்த டேவிட் ராஜூ முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, டாக்டர் டேவிட் ராஜூ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.