ரூ.2000 நோட்டை இன்னும் வச்சிருக்கீங்களா? ஒரு மாசம் தான் டைம்!
புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு இன்னும் ஒரு மாத காலமே அவகாசம் உள்ளது
அதிக மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதேசமயம், ரூ.2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அல்லது மாற்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பையடுத்து, புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் மூன்றில் 2 பங்குக்கும் மேலான நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் பெரும்பாலும் வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தியதன் மூலமாகவே திரும்ப வந்துள்ளது. மேலும், சில்லறை மாற்றியது மூலமாகவும் வங்கிகளுக்கு வந்தடைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பிரக்ஞானந்தா பெற்றோருக்கு கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா!
இந்த நிலையில், புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு இன்னும் ஒரு மாத காலமே அவகாசம் உள்ளதால், பொதுமக்கள் தங்களிடம் ரூ.2000 நோட்டுகள் இருந்தால் அதனை உடனடியாக வங்கிகளில் கொடுத்து மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரூ.2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய அல்லது மாற்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. எனவே, பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை. அதேசமயம், கடைசி நேரத்தில் சென்று அவசராவசரமாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.