துபாயில் இறந்தவர்களின் உடலைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதாம். தற்காலிக விசா எடுத்து, துபாய்க்கு வருகை புரிந்து இறந்தவர்களின் உடலைப் பெறுவது மிகக் கடினமாம். துபாயில் வசிக்கும் ஒருவரின் உத்தரவாதம் கொடுத்தால்தான் இறந்தவரின் உடல் விரைவாக ஒப்படைக்கப்படும். அந்த வகையில், துபாய் ஓட்டலில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, துணை தூதரக அதிகாரிகள் ஒத்துழைப்பில் அனுப்பப்பட்டாலும், துபாயில் வாழும் ஒருவரின் உத்தரவாதத்துக்குப் பிறகே, ஸ்ரீதேவி உடல் பெறப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவியின் உடலைக் காண, உறவினர்கள், ரசிகர்கள் கண்ணீரோடு காத்திருக்கும் நிலையில், அவரது உடலை, சவப்பெட்டியில் வைத்து அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து ஆவணத்தில் கையெழுத்திட்டவர் துபாயில் வாழ்ந்து வரும் கேளத்தைச் சேர்ந்த தன்னார்வலர் அஷ்ரஃப் (44). ஆமாம்... ஸ்ரீதேவியின் உடல், போனி கபூரின் பெயரில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அமீரக சட்டப்படி அஷ்ரப் கையெழுத்திட்ட பிறகே, ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடல்களை, தாயகம் அனுப்பத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை செய்ய அஷ்ரப் உதவி வருகிறார். 16 ஆண்டுகளாக அவர் இந்த சேவையை செய்து வருகிறாராம். இதுவரை 4,700 பேரின் உடல்கள் தாயகம் திரும்ப அஷ்ரப் உதவியுள்ளார். தனது சேவைக்காக நன்றியைக்கூட எதிர்பார்க்காத அஷ்ரப், சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான கட்டணங்களை மட்டுமே உறவினர்களிடம் இருந்து வாங்குகிறாராம். 

போனில் கூட இவர் அதிக நேரம் பேசுவதில்லையாம். ஏன் தெரியுமா? உறவை இழந்து துடிக்கும் ஒருவர் உதவி கோரி அழைக்கும்போது, அழைப்பு கிடைக்காமல் போய்விடக் கூடாதல்லவா? அதனால் தானாம். தனது உறவின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்று துடிக்கும் மக்களுக்காகவே இதனை செய்து வருவதாக அஷ்ரப் கூறுகிறார்.