பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமானிய மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. ஆனால், எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் பயணப்படி என்பது தற்போது விற்பனையாகும் பெட்ரோல் விலையைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகமாக இருக்கிறது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ. 84.49 காசுகளும், டீசல் லிட்டர் ரூ.77.49 காசுகளுக்கும் விற்பனைசெய்யப்படுகிறது.

டீசல் விலை உயர்வால் அத்தியாசவசியப் பொருட்கள், பால்பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள்,பஸ் கட்டணம், ஹோட்டல் சாப்பாடு ஆகியவையும் அதிகரித்துவிட்டது.  இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஆனால், இந்த பாதிப்பு எதையும் எம்.பி.க்கள் உணராமல் செய்யும் அளவுக்கு  பயணப்படி வழங்கப்படுகிறது. எம்.பி.க்களுக்கு மாதந்தோறும் பயணப்படி என்ற தரப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்கவும், தொகுதி தொடர்பான பணியில் பங்கேற்கவும், நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் பங்கேற்கவும் இந்த படிவழங்கப்படுகிறது.