டிஜிட்டல் இந்தியா சட்டம் தேர்தலுக்கு முன் வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
டிஜிட்டல் இந்தியா சட்டம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் நடைமுறையில் இருக்க வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாடு 2023 தலைநகர் டெல்லியில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “விரிவான ஆலோசனைக்கு அதிக நேரம் இல்லாததால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன், 23 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் ஐடி சட்டம் 2000-ஐ மாற்றாக கொண்டு வரப்படும் டிஜிட்டல் இந்தியா சட்டத்தை அரசாங்கத்தால் செயல்படுத்த முடியாமல் போகலாம்.” என்றார்.
இருப்பினும், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கான விதிகள் கருத்துக்கேட்புக்காக இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும், டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் இணையம் என்ற வார்த்தை கூட இல்லை என்றும், அதை பாதுகாப்பாக மாற்றியமைப்பதில் ஒருமித்த கருத்து உள்ளது என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்துக்கு பதிலாக இயற்றப்படவுள்ள அதன் வாரிசுச் சட்டம் டிஜிட்டல் இந்தியா சட்டம் என்று அழைக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சட்டத்திற்கான வரைவு தயாராக உள்ளது. அதுதொடர்பாக நிறைய வேலைகள் நடந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
மிக்ஜாம் புயலால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்!
“அடுத்த தேர்தலுக்கு முன், நாங்கள் அதை சட்டமாக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் பிரதமர் வலியுறுத்தும் விஷயங்களில் ஒன்று, டிஜிட்டல் சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக ஆலோசிக்க வேண்டும். ஆனால், எங்களிடம் போதுமான கால அவகாசம் இல்லை. எனவே, அடுத்த தேர்தலுக்கு முன் அதனை சட்டமாக இயற்ற முடியாது என நான் நினைக்கிறேன்.” என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
“முன்மொழியப்பட்ட டிஜிட்டல் இந்தியா சட்டம் ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் பயனர்களுக்கு தீங்கு விளைவிப்பதில் கவனம் செலுத்தும். போதை தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வயது வரம்பு, சமூக ஊடகங்கள் மூலம் தவறான செய்திகளை விருப்பப்படி கட்டுப்படுத்துதல் போன்றவற்றை வரையறுக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்றவற்றையும் அது ஒழுங்குபடுத்துகிறது.” எனவும் அவர் கூறினார்.